ரசித்துக் குளியல் போடுங்க.
தினமும் அனைவரும் ஆன்ந்தமாக செய்யவேண்டிய ஒரு விஷயம் குளியல். உடலில் இருக்கும் அழுக்குகளைப் போக்குவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தை அகற்றுவதற்காகவும் நாம் குளிக்கிறோம். ஆனால், இன்று பலரும் பக்கெட் தண்ணீரை மேலுக்கு ஊற்றிவிட்டு சென்ட் அல்லது ஸ்பிரே அடித்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
தற்காலத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது அபூர்வமாகிவிட்டது. அதிலும் கிராமங்களில் மட்டுமே இந்த அற்புதம் நடக்கிறது. அங்கேயும் தண்ணீர் இல்லாமல் பல நீர்நிலைகள் வெடித்து நிற்கின்றன. அதனால் குளியல் என்பது தற்போது நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிட்டது.
குளியலில் முக்கியமான ஒரு விஷயம், மனிதர்களாகிய நாம் எப்போது பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும். முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும் இதில் விதிவிலக்குகள் உள்ளன. ஆனாலும் மற்றவர்கள் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் சிறந்தது. அதுவும் காலில் இருந்துதான் குளியலை ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் காலில் நீரை ஊற்றும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும். மாறாக, தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியேற வாய்ப்பில்லாமல், தலையில் சேர்ந்து, உடல் சூடு அதிகரித்துவிடுகிறது. இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல்சூடு தீர்வதில்லை. எனவே, இதனை தவிர்க்க காலில் இருந்து குளியலைத் தொடங்க வேண்டும். ஏரி, ஆறுகளில் குளித்தால் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதுவே காரணம்.
ஏரியில் முதலில் காலை நனைத்து, தலைக்கு சிறிது தண்ணீரை தெளித்துப் பின்னரே குளியல் செய்ய ஆரம்பிப்போம். தலைக்கு தண்ணீர் தெளிப்பதன் மூலம் சூடானது மூளைக்கு செல்லாமல் காது, மூக்கு, மற்றும் கண் வழியே சென்றுவிடும். இதை ஆறு, ஏரி, குளம் உள்ளிட்டவற்றில் குளிக்கும்போது உணர முடியும். முதலில் நம் கால்கள் நீரில்படும். பின், படிப்படியாக முழங்கால், இடுப்பு, மார்பு, முகம் என நனைத்து இறுதியில் தலை மூழ்குவோம். மேலும், ஏரி மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது சூரிய ஒளி மூலம் இயற்கையான வைட்டமின் டியும் உடலுக்கு கிடைக்கிறது.
அத்துடன், வாரம் இருமுறை எண்ணெய் குளியல் செய்யவேண்டும். குளித்து முடித்த பின்னர், ஒரு குவளை தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி அருந்தினால் உடலில் உள்ள ரத்த அழுத்தம் சீரான நிலையை அடையும். மேலும், செயற்கை சோப்புகளை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும்.
குளியலுக்கு முன் நாம் செய்யவேண்டிய ஒரு முக்கிய காரியம் என்னவெனில், வெறும் வயிற்றுடன் குளிக்க வேண்டும். காரணம், குளிக்கும் முன் வயிற்றில் ஏதாவது இருப்பின் நாம் குளியல் செய்யும்போது இரைப்பை மற்றும் குடலுக்கு ஓர் அழுத்தத்தை அளித்து, விரைவில் செரிக்கச் செய்வதால் ஏப்பம் வருகிறது. இதனால் நாளடைவில் செரிமான மண்டல கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
குளிக்கும்போது நிறைய நபர்கள் முழங்காலுக்குப் பின்புறம், பாதம், கழுத்தின் மேல் பகுதி, அக்குள், நெற்றி, கை விரல்களுக்கு இடைவெளி, முழங்கை போன்ற பகுதிகளைத் தேய்த்துக் குளிப்பதே இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. பக்கெட் தண்ணீர் என்றாலும் இந்த இடங்களைக் கழுவ மறந்துடாதீங்க.
உண்மையில் குளியலும் ஒரு கலையே, அதனை ரசித்து முறைப்படி செய்தால் ஆரோக்கியமும் ஆனந்தமுடனும் இருக்கலாம்.