100க்கு ஆசைப்படும் நீரஜ் சோப்ரா

Image

வின்னிங் ஸ்டாரின் புதிய இலக்கு

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா.
1900ம் ஆண்டு தொடங்கிய இந்திய ஒலிம்பிக் வரலாற்றில், 2008ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கப்பதக்கமே, இந்தியாவிற்காக ஒரு தனிநபர் வென்ற முதல் மற்றும் கடைசி தங்கப்பதக்கமாக இருந்தது. இந்த வரலாற்றையும் மாற்றி எழுதியவர் நீரஜ் தான். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கத்தை தட்டிச்சென்று, இந்தியாவிற்கான இரண்டாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இந்தமுறையும் தங்கம் வென்று மற்றுமொரு இமாலயச் சாதனையைப் படைப்பார் எனப் பெரிதும் மக்கள் எதிர்பார்த்தநிலையில், கடந்த ஒலிம்பிக்கைவிட இம்முறை அதிக தூரம் ஈட்டி எறிந்தபோதும், அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்துள்ளது. ஆம், 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, அவர் எறிந்த ஈட்டியின் தூரம் 87.58 மீட்டர். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர்.

இவரை உலகம் திரும்பிப் பார்த்தது 2016ம் ஆண்டு. போலந்தில்  இருபது வயதுக்கு உட்படோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் பலரும் தங்களது திறமையை நிரூபிக்கும் வகையில் ஈட்டிகளை எறிகின்றனர். கிரனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ், 79.65 மீட்டர் தூரம் வீசுகிறார். அடுத்து, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தஜோகன் கிராப்லர் அவரைவிடச் சற்றுக் கூடுதலாக 80.59 மீட்டர் தூரம் வீசுகிறார். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த ஒரு புதிய இளம்புயலோ, யாரும் எதிர்பாராத அளவுக்கு  86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிகிறார். ஆம், இப்போது அவர் வீசியதே உலக சாதனையாக மாறிவிட்டது. இதற்குமுன் கடந்த 2011ல், லாத்வியா வீரர் சிர்மால்ஸ் 84.69 மீ தூரம் வீசியதே உலக சாதனையாக இருந்தது. அதை தகர்த்து புதிய சாதனை படைத்தார் ஹரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
யார் இந்த நீரஜ் சோப்ரா?
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தில் 1997ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 24ம் தேதி பிறந்தவர், நீரஜ் சோப்ரா. இவருடைய தந்தை சதீஷ்குமார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் இல்லத்தரசி. சோப்ராவுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். குடும்பத்தின் மூத்த மகனாக அவர், சிறுவயது முதலே ஆடம்பரமாகவே இருந்தார்.  ஆனாலும் அந்த வயது முதல்  கிரிக்கெட் மீது விருப்பம் கொண்டவராக இருந்த சோப்ராவை, அவரது மாமா விளையாட்டில் சேரச் சொல்லி வற்புறுத்துகிறார்.
அந்த சமயத்தில், ஒருசில சீனியர் வீரர்கள் அரங்கத்தில் ஈட்டிகள் வீசுவதைப் பார்த்து வியந்துபோகிறார், சோப்ரா. அதைப் பார்த்த பிறகு, ஈட்டி எறிதலில் நாட்டம்கொள்ள விரும்புகிறார்.  அதில் பயிற்சி பெற்றால், தன்னுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறர்.

சிறுவயதில் குண்டாக இருந்தார் நீரஜ். அதனால்,  தன்னுடைய எடையைக் குறைப்பதற்காக ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டார். மேலும் அவருக்கு இனிப்புப் பொருள்களையும் கொழுப்பு உணவுகளையும் குறைப்பது  பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும், மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார்.  அந்த நேரத்தில் சீனியர் வீரரான ஜெய்வீர் ஈட்டி பயிற்சி செய்வதைப் பார்த்து வியக்கிறார். அவர், பானிபட் மாவட்டத்துக்கு ஈட்டி எறிதலில் பெயர் வாங்கித் தந்தவர்.
சோப்ரா, ஒருநாள் அவரைச் சந்தித்து, அவருடைய ஈட்டியை வாங்கி பயிற்சி செய்கிறார். அந்த உற்சாகம், அவருக்குள் நம்பிக்கையை விதைக்கிறது. அன்று முதல் தன்னாலும் வெகுதூரம் ஈட்டியை எறியமுடியும் என்று அவர் மனதுக்குள் தீர்மானிக்கிறார். அதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறார். கூடவே, உணவிலும் கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

அதுவரை, சைவ உணவு மட்டுமே உண்டு வந்த நீரஜ், உடலில் புரதச் சத்து வேண்டுமென்பதற்காக கோழிக்கறி உண்ணத் தொடங்குகிறார். மேலும், கூட்டம் நிறைந்த பஸ்களில் சென்றுதான் பயிற்சி எடுத்துவந்தார்.  பானிபட்டில் உள்ள சிவாஜி ஸ்டேடியத்தில் தனது பயிற்சியைத் தொடங்கிய சோப்ராவுக்கு, அங்கு சரியான பயிற்சியாளர்களோ, அதற்கான அடிப்படை வசதிகளோ இல்லை. ஆனாலும் முயற்சியை கைவிடாது பயிற்சி மேற்கொண்டார். பின்னர், தன்னுடைய பயிற்சி தளத்தை பஞ்ச்குலாவுக்கு மாற்றி அங்கு பயிற்சி பெறுகிறார். அடுத்து, இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்தும் பயிற்சிபெறுகிறார்.

இப்படியான பயிற்சியின்போது 2014ம் ஆண்டில், நீரஜ் தனது முதல் ஜாவ்லினை  ரூ 7000 கொடுத்து வாங்கினார். பின்னர், சர்வதேச அளவில், அவர் கலந்துகொண்டபோது ரூ .1 லட்சம் மதிப்புள்ள ஈட்டி வாங்கினார். 2012ல் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பே, சோப்ரா கலந்துகொண்ட முதல் உள்நாட்டுப் போட்டியாகும். அதில், அவர் தங்கப் பதக்கம் வென்றதுடன், 68.46 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்.  

அடுத்து, 2013ம் ஆண்டில், உக்ரைனில் 16 வயதுக்கான உலக இளைஞர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா,  19வது இடத்தை மட்டுமே பிடித்தார். அதுமுதல் அடுத்து வந்த போட்டிகள் அனைத்திலும் தன்னுடைய சாதனைகளைப் படைத்ததால் உலக அளவில் பெயர் பெற்றார். 2015ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்  போட்டியில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா, 68.4 மீட்டர் தூரம் எறிந்து, இளையோருக்கான தேசிய சாதனையைப் படைத்தார். அதன்பிறகு உலக தடகளம், தெற்காசிய தடகளம், பாட்டியாலா சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டி எனப் பல போட்டிகளில் கலந்துகொண்டு தங்க வேட்டையைத் தனதாக்கினார்.  அதுமட்டுமல்ல… ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் அதிகமாக வீசும் அளவுக்கு முன்னேறினார் நீரஜ்.
துபாயில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் கலந்துகொண்ட நீரஜ், தன்னுடைய ரோல்மாடலாக அவர் எண்ணிய  தாமஸ் ரோஹல்லேர், ஜோஹன்னஸ் வெட்டேர், ஹாஃப்மண் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் போட்டியிட நேர்ந்தது. தனது சிறு வயதில் இவர்களின் ஈட்டி எறிதல் வீடியோவைக் கண்டுதான்  தாம் பயிற்சிபெற்றதாக நீரஜ்  முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது ரோல்மாடல்களுடன் போட்டியிட்ட நீரஜ், தனது இரண்டாவது வாய்ப்பில் 87.43 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனையை முறியடித்தார்.  20 வயதே நிரம்பிய நீரஜ் சோப்ராவின் திறமையைக் கண்ட சகவீரர்கள்,  ‘சோப்ராவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தடகள பிரிவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற பல்லாண்டு கனவை, இளம் வீரர் நீரஜ் சோப்ராவே தீர்த்துவைப்பார்’ என்றனர், அவர்கள்..

2018 சீசனின் முடிவில், நீரஜ் சோப்ராவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது, இது அவரை அடுத்த சில மாதங்களுக்கு தனிமைப்படுத்தியிருந்தது. 2019ம் ஆண்டு மே மாதம், அவர் முழங்கையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். இதனால் அவர் 2019 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய திறந்த தடகள சாம்பியன்ஷிப்பை தவறவிட்டார். ஆபரேஷனுக்குப் பிறகு பெரிய போட்டி எதிலும் பங்கேற்காமல் இருந்துவந்த நீரஜ் சோப்ரா, கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் கலந்துகொண்டு, தனது 4வது முயற்சியில் 87.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார்.

இப்போது 90 மீட்டரை லட்சியமாக வைத்திருக்கும் நீரஜ் சோப்ரா அடுத்து, இந்த உலகம் வியக்கும் வகையில் 100 மீட்டர் எறிய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். இது சாத்தியமில்லை என்று பலரும் சொல்கிறார்கள். இப்படித்தான் 10 நொடியில் 100 மீட்டர் ஓட முடியாது என்றும்  சொன்னார்கள். அதை முறியடித்தார்கள். அப்படியே இதிலும் நீரஜ் வெல்லட்டும். இந்தியாவின் பெயர் நிலைக்கட்டும்.

Leave a Comment