கட்சியைக் கதற விடும் குலக்கல்வி ராஜாஜி
குலக்கல்வித் திட்டத்தின் காரணகர்த்தா ராஜாஜியை காங்கிரஸ் கட்சியினரோ, பா.ஜ.க.வினரோ ஸ்டாம்ப் சைஸில் கூட தங்கள் போஸ்டரில் போடுவதில்லை. ஆனால், அவரை மதுவிலக்குப் போராளி என்று கட் அவுட் வைத்துக் கொண்டாடியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. நேரத்திற்கு ஒன்றாக வாய்க்கு வந்ததைப் பேசும் சீமானைப் போன்று பரபரப்புக்காக திருமாவளவனை வைத்து ஆதவ் அர்ஜுன் கட்சியை காலி செய்யப் பார்க்கிறார் என்று எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
இது குறித்துப் பேசும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ‘’நமக்கு சீட் முக்கியமில்லை, கொள்கையே முக்கியம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கிவரும் திருமாவளவனுக்கு இந்த கட் அவுட் ஐடியா கொடுத்தவர் ஆதவ் அர்ஜூன் என்கிறார்கள். “ராஜாஜியால் தான் அண்ணா ஜெயித்தார்” என்று ஒரு விவாதத்தில் ஆதவ் சொன்ன நேரத்திலேயே அவர் எந்தக் கட்சியின் கொள்கைக்குக் கட்சியைக் கொண்டுசெல்கிறார் என்பது தெரிந்துவிட்டது
மதுவிலக்குப் போராளிக்கு கட் அவுட் என்றால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கூடதான் மது ஒழிப்பு பேசுகிறார்கள். அவர்களுக்கும் கட் அவுட் வைத்திருக்கலாமே? மதுவை விடவும் குலக்கல்வி ஆபத்தில்லையா? தலைவர் எப்போதும் மாற்றி மாற்றிப் பேசுபவர் அல்ல. ஆனால், இப்போது சீமான் போன்று நேரத்திற்கு ஒன்றாகப் பேசுகிறார். கருணாநிதி சாராயக் கடையை மூடினார் என்று பேசுகிறார். அதேநேரம், இந்த மாநாடு என்ன காரணத்துக்காக கூட்டப்பட்டதோ அது நிறைவேறப் போவதில்லை என்று தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி மேடை ஏறிப் பேசி விட்டார்.
நாடு முழுக்க மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். அதை எதிர்த்து என்ன செய்யப் போகிறோம் என்று பேசாமல் விஷயத்தை ராஜாஜியைக் கொண்டு திசை திருப்புகிறார். எந்த ஆளுமைப்பண்புகளும் சமூகப் பார்வையும் இல்லாமல் பிறப்பின் அடிப்படையில் எல்லாவற்றையும் அனுபவித்த அரியவகை ஏழைதான் ராஜாஜி என்ற ராஜகோபலாச்சாரியார். இவரை எப்படி ஒரு தலைவராகப் பார்ப்பது என்றே புரியவில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் எங்கள் கட்சியும் சீமான் கட்சியைப் போன்று நேரத்துக்கு நேரம் கொள்கையை மாற்றும் கோமாளிக் கூட்டமாக மாறிவிடும் போலிருக்கிறது. அடுத்து வன்முறை எதிர்ப்பு மாநாடு நடத்தி அதில் கோட்சேவுக்கு கட் அவுட் வைக்காமல் இருந்தால் சரி’’ என்று வருத்தமாகிறார்கள்.
அதுசரி, அட்மின் சொல்வதைத் தானே திருமா கேட்க முடியும்.