என்ன செய்தார் சைதை துரைசாமி – 154
தனியார் பள்ளிகள் மாணவர்களின் வெற்றி சதவீதத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சுமாராகப் படிக்கும் மாணவர்கள், மோசமாகப் படிக்கும் மாணவர்களையும் எப்படியாவது தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது ஆசிரியர்களுக்குக் கடமையாகிவிடுகிறது. எனவே, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதிலும் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
மாலையில் பள்ளி நேரம் முடிந்த பிறகு சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு டியூஷன் என்ற பெயரில் சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்குத் தனியே பரீட்சை நடத்தி எப்படியேனும் ஆல் பாஸ் ஆவதற்கு உழைக்கிறார்கள். இதனை பெற்றோரும் ரொம்பவே விரும்புகிறார்கள். ‘அந்தப் பள்ளியில் பிள்ளையை சேர்த்துவிட்டால் எப்படியும் பிள்ளையை பாஸ் ஆக வைச்சிடுவாங்க…’ என்று பெற்றோர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்காக கூடுதல் கட்டணம் கட்டுவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளைப் போலவே மாநகராட்சிப் பள்ளிகளிலும் சுமாராகப் படிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது மேயர் சைதை துரைசாமியின் பெரும் கனவாக இருந்தது. அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குப் பரீட்சையில் தோல்வி அடைவது மிகப்பெரும் ஆபத்து. ஏனென்றால், படிப்பு வரவில்லை என்று பிள்ளையை ஏதேனும் வேலைக்கு அனுப்பிவிடுவார்கள். இதனால் அந்த மாணவரின் குடும்பம் முன்னேறுவதற்கன ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிடுகிறது.
எனவே, தனியார் பள்ளிகளைப் போலவே மாநகராட்சி மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பள்ளியில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி, தனியார் பள்ளிகளைப் போன்றே, பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு டியூஷன் நடத்தப்பட்டன. சில பள்ளிகளில் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள் எடுத்தார்கள். இதற்காக பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணியினை மேற்கொண்டார்கள். இந்த மாற்றம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் மதிப்பையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது.
- நாளை பார்க்கலாம்.