தி.மு.க.வில் புதிய திருப்பம்
துணை முதல்வர் பதவியை கருணாநிதியிடம் இருந்து பெறுவதற்கு ஸ்டாலின் ரொம்பவே காத்திருந்தார். கருணாநிதி முதல்வராக இருந்த வரையிலும் முதல்வர் பதவி பற்றி யோசிக்கவும் முடியவில்லை. ஆனால், 46 வயதிலேயே துணை முதல்வர் பதவிக்கு வந்துவிட்டார். டீ சர்ட் அணிந்த முதல் துணை அமைச்சர் என்று தி.மு.க.வினர் கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்தில் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை முதல்வராக இருந்திருக்கிறார்கள். எனவே மூன்றாவது துணை முதல்வராகி இருக்கிறார் உதயநிதி. தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர்கள் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், மேகாலயா, ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.
மற்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அதற்கு எந்த அவசியமும் அவசரமும் இல்லாத நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தப் பதவி கிடைத்திருக்கிறது. அதாவது அடுத்த முதல்வரும் தலைவரும் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கே இந்த முடிசூட்டல் என்கிறார்கள்.
அது சரி, துணை முதல்வருக்கு என்ன அதிகாரம் என்று தெரியுமா..?
துணை முதலமைச்சர் என்ற பதவி அளிக்கப்பட்டாலும், நடைமுறையில் அவரும் ஒரு சாதாரண அமைச்சர் மட்டுமே. அதாவது முதலமைச்சரால் வழிநடத்தப்படும் அமைச்சரவையின் ஒரு உறுப்பினர். மற்ற அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் அவருக்கு கூடுதல் சம்பளமோ, பயன்களோ கிடையாது. அதேநேரம், அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், அவரது பணிகளையும் கூட துணை முதலமைச்சர் மேற்கொள்ளலாம். முதல்வர் இல்லாத நேரத்தில் முதல்வராக செயல்படலாம்.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கட்சியிலும் ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு நிகரான அதிகாரம் உதயநிதிக்கு இருக்கிறது என்பதே உண்மை. அதனாலே சீனியர்கள் அனைவரும் கதிகலங்கி நிற்கிறார்கள்.