ஸ்டாலின் அரசில் நான்கு பட்டியலின அமைச்சர்கள்
தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் செய்யப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை, ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை மற்றும் ஆவடி நாசருக்கு சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்த மாற்றத்தின் மூலம் முதன்முறையாக தமிழ்நாட்டு அமைச்சரவையில் முதன்முறையாக நான்கு பட்டியலின அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர். அதாவது, மதிவேந்தன் (அருந்ததியர்), கயல்விழி (தேவந்திர குல வேளாளர்), சிவி கணேசன் (ஆதி திராவிடர்), கோவி செழியன் (ஆதி திராவிடர்) என இதுவரை எப்போதும் இல்லாத வகையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதுவும் முதன்முறையாக அமைச்சராகும் கோவி செழியனுக்கு உயர் கல்வித்துறையைக் கொடுத்திருப்பது பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வேறு வழியின்றி வரவேற்க வேண்டிய நிலைக்கு திருமாவளவன் வந்திருக்கிறார். அதாவது, ‘’உயர்கல்வித் துறையை பட்டியல் சமூகத்தைச் சார்ந்த உறுப்பினருக்கு ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வரவேற்கிறோம்’’ என்று பாராட்டியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்ய நினைத்ததையோ அதையே தி.மு.க. செய்துவிட்டது. ஆகவே, கட்சியைக் கலைச்சிட்டுப் போங்கப்பா என்று தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் வைத்துவருகிறார்கள்.
அட, சரியாகத்தான் சொல்கிறார்கள்.