• Home
  • ஞானகுரு
  • லஞ்சமும் அடுத்தவர் மனைவியும் ஒன்று தான்…

லஞ்சமும் அடுத்தவர் மனைவியும் ஒன்று தான்…

Image

தொடாமல் விலகி நில்லுங்கள்

ஞானகுருவை சந்தித்த மகேந்திரனுக்கு 25 வயது இருக்கலாம். கேட்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனே பேச்சைத் தொடங்கி, சுற்றி வளைத்து, எதையெதையோ பேசிவிட்டு, கடைசியாக மனதில் இருப்பதை கேட்டேவிட்டான்.

‘’நான் இப்போது அரசு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். என்னுடன் வேலை செய்யும் பலரும் லஞ்சம் வாங்குகிறார்கள். நான் லஞ்சம் வாங்கவில்லை என்றாலும் என் பெயரைச் சொல்லி அவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை, எல்லோரும்தான் வாங்குகிறார்கள் என்று ஆசை காட்டுகிறார்கள். நான் எந்த நிமிடமும் மாறிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது… எப்படி நான் உறுதியுடன் இருப்பது?” என்று கேட்டான்.

மகேந்திரன் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்த ஞானகுரு, ‘’முனிவர்களின் தவத்தை கலைக்க அழகிகளை தேவேந்திரன் அனுப்புவது போன்று, மனிதனுக்கு ஆசையை உருவாக்க பலரும் முயற்சி செய்வார்கள். ஏனென்றால், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு, துணை தேடிக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

லஞ்சம் என்பது ஒரு பேரழகி. அவளை பார்த்தவுடன் தொட்டுக்கொள்ளவும் கட்டிக்கொள்ளவும் ஆசை வரத்தான் செய்யும். ஆனால், அவள் ஒரு மாய பிம்பம். உன் கண் முன்னே இருந்தாலும், அவள் உன் பிடியில் ஒருபோதும் சிக்க மாட்டாள். ஆனாலும், நீ அவளுடைய கனவில் இருந்து விடுபட முடியாது.

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் ஒருபோதும் நிற்கப்போவதில்லை. ஏனென்றால், கடவுளுக்கு லஞ்சம் அதாவது காணிக்கை கொடுத்து, தங்கள் காரியத்தை சாதிக்க ஆசைப்படும் மனிதர்கள், அது தவறு என்று உணர்வதே இல்லை. கடவுளையே ஏமாற்ற நினைப்பவர்கள், சக மனிதன் நேர்மையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால், அவர்கள் கூட்டத்தில் உன்னையும் சேர்வதற்கு வற்புறுத்தவே செய்வார்கள்.

இன்று உன் மனதில் இருக்கும் உறுதி நாளையும் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், உனக்கும் ஏதேனும் ஒரு அவசியம் வரும். அப்படிப்பட்ட பலவீனமான நேரத்தில் உன்னை ஜெயிப்பதற்காக லஞ்சம் காத்திருக்கும்.

எனவே, மனம் பலவீனம் அடையும்போது நான் கூறுவதை ஞாபகம் வைத்துக்கொள். அதாவது, நீ பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் என்ன நடக்கும் என்று கற்பனை செய்.  நீ எத்தனை பணம் சேர்த்திருக்கிறாய் என்று யாரும் பார்க்கப்போவதில்லை. நீ எப்படி பணியாற்றினாய், இந்த காலத்திலும் நீ எத்தனை உறுதியுடன் நேர்மையாக இருந்தாய் என்பதை மட்டும்தான் சிலாகித்துப் பேசுவார்கள், மதிப்பார்கள். உன் மீது எந்த வழக்கும் இருக்காது. நீ நிம்மதியாக வீடு திரும்பலாம்.

லஞ்சம் வாங்காமல் மனதை சமாதானப்படுத்த இன்னொரு வழியும் இருக்கிறது. அதாவது, இன்றுதான் நீ வேலையில் இருக்கும் கடைசி நாள் என்ற எண்ணத்துடன் வேலைக்குச் செல். அதாவது நாளையே நீ மரணம் அடைந்து போகலாம் அல்லது இந்த உலகம் அழிந்துபோகலாம் என்ற எண்ணத்துடனே வேலைக்குச் செல்.

நாளை மரணம் அல்லது உலகம் அழியப்போகிறது என்பதை கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்துகொள். அதனால் எதிர்காலம் இல்லாத ஒருவனுக்கு லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. கண்ணுக்கு முன்னே மரணம் இருப்பதை அறிந்துகொண்டால், ஒருபோதும் யாருக்கும் துரோகம், துன்பம் இழைக்க மனம் வராது. லஞ்சம் வாங்கவும் தோன்றாது.

உனக்கு இப்போது அரசு மட்டும்தான் எஜமானாக இருக்கிறது. லஞ்சம் வாங்கத் தொடங்கினால், உனக்கு கப்பம் கட்டும் ஒவ்வொரு நபரும் எஜமானர்கள். நீ, அவர்களுடைய அடிமை நாய் என்பதை புரிந்துகொள்.

லஞ்சம் வாங்குவதற்கு என் குடும்பம்தான் தூண்டியது என்று சிலர் சொல்வதை நம்பாதே. அப்படி தூண்டுவது ஒரு நல்ல அம்மா, மனைவி, குழந்தைகளுக்கு அழகல்ல. எந்த ஒரு தாயும், எந்த ஒரு நல்ல மனைவியும் லஞ்சம் வாங்குவதையும், அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளையும் விரும்பவே மாட்டார்கள். எனவே, லஞ்சம் வாங்குவதை தாய்க்கும் மனைவிக்கும் செய்யும் துரோகமாக எண்ணிக்கொள். அதன்பிறகு உனக்கு லஞ்சம் வாங்கும் எண்ணம் வராது.

அரசு பணி என்பது வரம். மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அதை நழுவ விடாதே. அதேநேரம் அரசு பணியில் இருக்கும் ஒவ்வொராலும் கார், வீடு போன்றவை நிச்சயம் வாங்க முடியும். அதுவே லஞ்சம் வாங்குவதால் பெரிய வீடு, பெரிய கார் வாங்கலாம். அவ்வளவுதான். எத்தனை பெட்ரூம் வீடு வாங்கினாலும், உன்னால் ஓர் அறையில்தான் படுத்து உறங்க முடியும் என்பதை புரிந்துகொள்.

கொஞ்ச நாட்கள்தான் உன்னை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதற்கு வற்புறுத்துவார்கள். அதன்பிறகு, ‘பிழைக்கத்தெரியாத பைத்தியம்’ என்று பட்டம் கட்டிவிட்டு போய்விடுவார்கள். நிம்மதி இல்லாத கோடீஸ்வரனாக காலம் தள்ளுவதைவிட, சந்தோஷமான பைத்தியக்காரனாக இருப்பது நல்லது மகனே…’’ என்று முடித்தார்.

‘’திடீரென எனக்கோ என் குடும்பத்தாருக்கோ லட்சக்கணக்கில் செலவழிக்கக்கூடிய நோய் வந்துவிட்டால், எப்படி சமாளிப்பேன்..?’’

‘’சமாளிக்க நினைக்காதே… செத்துப்போ…’’

மகேந்திரன் கண்களில் உறுதி தெரிந்தது. 

Leave a Comment