ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், வேலையைக் கற்றுக்கொள்ளும் வரையிலும் மேல் அதிகாரி கொடுமைக்காரராகவே தெரிவார். தவறுக்காக கன்னாபின்னாவென்று திட்டுவிழும். அலுவலகம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று இவற்றை ஏற்றுக்கொள்ளும் பெண்களால், மாமியார் சாதாரணமாக பேசுவதைக்கூட ஏற்க முடிவதில்லை. ஏனென்றால் மாமியார் என்றாலே பூதம், வில்லி, கொடுமைக்காரி என்ற இமேஜ் இருப்பதால், ஒரு எதிரியாகவே பார்க்கிறாள்.
தன் கணவனை தன்னிடம் இருந்து மாமியார் பிரித்துவிடுவார் என்று பயப்படுகிறாள். இதே பயம் மாமியாரிடமும் இருக்கிறது. இத்தனை நாளும் தன்னிடம் இருந்த மகனை ஒட்டுமொத்தமாக பிரித்துவிடுவாள் என்று மருமகளை நினைத்து அச்சப்படுகிறாள் மாமியார். இருவரது பயமும்தான் சண்டை, சச்சரவாக வளர்கிறது. யாரும் யாரிடம் இருந்து பிரியப்போவதில்லை, அனைவரும் இணைந்து சந்தோஷமாக வாழப்போகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் உணர்த்துவதில்தான் திருமண வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.
