தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத் சிங் வாக்குமூலம்
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங்கிற்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று, அவர் ஒரு சுதந்திரப் போராளி. இரண்டாவது அவர் பகுத்தறிவுவாதி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தீவிரத்தை முதலில் பார்க்கலாம்.
ஒரு சிலருடைய பெயரைச் சொன்னாலே உணர்வுபூர்வமான பிணைப்பு வரும். பகத் சிங் என்று சொன்னாலே ஒரு கோபக்கார இளைஞன் முகம் ஞாபகத்துக்கு வரும். ஒரு தேசத்தின் கண்ணீர், அடிமைத்தனத்திற்கு எதிராக எழுந்த நெருப்பை உணரவைக்கும் ஒரு பெயர்தான் பகத் சிங்.
சுதந்திர நெருப்பு
அவர் 23 ஆண்டுகள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தார். ஆனால், பலர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பிவிட்டு சென்றார்.

ஆங்கிலேயரின் காலடியில் இந்திய நாடு நசுங்கிக் கொண்டிருந்த இருண்ட காலத்தில் பகத்சிங் பிறந்தார். விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திரம் கேட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை, இளம் பகத் சிங்கின் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தியது.
அப்போது அவர் ஒரு சிறுவன். ஆனால், அந்த ரத்தம் தோய்ந்த மண் அவரது மனதில் ஒரு கேள்வியை எழுப்பியது.
“என் நாடு எப்போது சுதந்திரமாகும்?” என்ற கேள்வியே அவரை புரட்சியாளனாக மாற்றியது. அவர் நிறையப் படித்தார். உலக அரசியல், புரட்சி, சமூகம், பொருளாதாரம், சமத்துவம் என்று ஆழமாக சிந்தித்தார். அவருக்கு சுதந்திர இந்தியா மட்டும் கனவு அல்ல. பசி இல்லாத இந்தியா, சாதி வேறுபாடு இல்லாத இந்தியா, மனிதன் மனிதனைச் சுரண்டாத இந்தியா வேண்டும் என்பதுதான் அவரது பெரிய கனவு.
“செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு ஒரு பெரிய சத்தம் தேவை” என்பதற்காக ஒரு புரட்சி செய்தார். 1929 ஏப்ரல் 8 அன்று, டெல்லியில் இருந்த மத்திய சட்டமன்றத்தில் பகத் சிங்கும் அவரது தோழர் படுகேஷ்வர் தத்தும் குண்டுகளை வீசினர்.
இதன் நோக்கம் மக்களைக் கொல்வது அல்ல. ஆங்கிலேய அரசின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். குண்டுகள் வீசிய பிறகு அவர்கள் தப்பி ஓடவில்லை. துண்டுப் பிரசுரங்களை வீசியதுடன், “இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று முழக்கமிட்டு, தாங்களாகவே கைதானார்கள்.
கைதான பகத் சிங் மீது லாகூர் சதி வழக்கு போடப்பட்டது. 1928-ல் சைமன் கமிஷனுக்கு எதிராக போராடிய லாலா லஜபத் ராய் மீது காவல்துறையினர் கொடூரமாக தடியடி நடத்தினர். அதில் ஏற்பட்ட காயங்களால் அவர் பின்னர் உயிரிழந்தார். இதற்கு காரணமான காவல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட்டை பழிவாங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அடையாளத் தவறால் பிரிட்டிஷ் காவல் அதிகாரியான ஜான் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். இறுதியில் இதுவே பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சிறைக்குள் ஒரு நெருப்பு
ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்டார். அத சிறை அவரை உடைக்கவில்லை. சிறைக்குள் அவர் இன்னும் வலிமையானார். இந்திய கைதிகளுக்கும் ஆங்கிலேய கைதிகளுக்கும் வழங்கப்பட்ட உணவு மற்றும் வசதிகளில் இருந்த பாகுபாட்டை எதிர்த்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடல் மெலிந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அவரது மனம் மட்டும் தலைகுனியவில்லை. சிறை அதிகாரிகள் அவரது உடலை அடக்க முயன்றார்கள். எதுவும் நடக்கவில்லை. அந்த போராட்டம் நடந்தபோதே பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வந்தது.
பொதுவாக ஒரு சாதாரண 23 வயது இளைஞன் என்றால் உயிரைக் காப்பாற்றக் கெஞ்சுவார். மன்னிப்பு கேட்பார். ஆனால் பகத் சிங்? அவர் மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை. ஏனென்றால், அவர் உயிரைவிட உயர்ந்த ஒன்றாக சுதந்திரத்தை விரும்பினார்.
1931 மார்ச் 23 அன்று, லாகூர் சிறையில் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவே அழுதது. ஆனால், தூக்குமேடைக்குச் செல்லும் அந்தக் கடைசி நிமிடங்களிலும் அவர்கள் பயத்தில் நடுங்கவில்லை என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் மரணத்தை நோக்கிச் செல்லவில்லை. அவர்கள் வரலாற்றுக்குள் நடந்து சென்றார்கள்.
பகத் சிங் மறுபக்கம்
சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் எழுதிய, ’நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற நூல் இன்றும் ஒரு முக்கியமான ஒரு கட்டுரைத் தொகுப்பாக விளங்குகிறது. அவர் நாத்திகனாக மாறியதற்கான பின்னணி, அதற்கு தர்க்கரீதியான காரணங்களை தெளிவாக விளக்கியிருக்கிறார்.
பகத் சிங்கின் சிந்தனைப் போக்கு எவ்வாறு மாறியது என்பதை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
1. குடும்ப பின்னணி
சிறுவயதில் பகத் சிங் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவே இருந்திருக்கிறார். அவரது தாத்தா, தந்தை மற்றும் தாய் என குடும்பத்தினர் அனைவருமே தீவிரக் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். ஆனால், அவர் வளர வளர வாசிப்பின் மூலம், சிந்தனையின் மூலம் கடவுள் நம்பிக்கை அவரை விட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.
2. வாசிப்பின் அவசியம்
நாத்திகனாக மாறியதற்கு மிக முக்கியமான காரணமாக பகத் சிங் குறிப்பிடுவது கற்றுணர்தல் என்ற கருத்தைத்தான். சும்மா வாசிக்காமல், அதை ஆழமாகக் கற்று உணர வேண்டும் என்பதற்கு பகத் சிங் கூறும் விளக்கம் மிக ஆழமானது:
எதிராளிகளின் பலமான ஆட்சேபனைகளுக்கு அச்சமின்றி ஆணித்தரமான பதில், விளக்கம் கொடுப்பதற்கு கற்றுணர்ந்தார். லட்சியம், கொள்கை ஆகியவற்றின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
3. வழிகாட்டிகள்
மனிதர்கள் அனைவரும் எந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும் என்பதற்குச் சில முக்கிய வழிகாட்டல்களை பகத் சிங் முன்வைக்கிறார்.
* பொதுவுடைமையைப் புரிந்து கொள்வதற்கு கார்ல் மார்க்ஸ் நூல்கள்.
* புரட்சியைப் புரிந்து கொள்ள ரஷ்யப் புரட்சி உருவாக்கிய லெனின் பற்றிய நூல்கள்.
* மனிதப் பரிணாமத்தைப் தர்க்கரீதியாக அறிய சார்லஸ் டார்வினின் ‘ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ்’ (Origin of Species) நூல்.
4. கடவுள் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கையும், தத்துவ சாஸ்திரங்களும் மனிதனின் பலவீனமே தவிர, வலிமை அல்ல என்கிறார் பகத் சிங்.
மனிதன் தனது வாழ்க்கையில் துன்பப்படும் நேரத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வஞ்சிக்கப்பட்டுத் தனிமையாகும் நேரத்தில், தனக்கு ஆதரவாக யாராவது ஒருவர் இருக்க மாட்டார்களா என்று ஏங்குகிறான். அந்த ஏக்கத்தில் உருவான ஒரு கற்பனை அமைப்பே கடவுள். இந்த எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல், மனிதன் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்வது அவனது பலவீனத்தையே காட்டுகிறது.
அதேபோல், தினமும் இறைவனிடம் தன் தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், தொழுகையில் ஈடுபடுவதும் மனிதனின் சுயநலத்தையே வெளிப்படுத்துகிறது.
5. புரட்சியின் அடையாளம்:
ஒரு மனிதனுக்குப் பகுத்தறியும் ஆராய்ச்சித்திறனும், சுயேச்சையாகச் சிந்திக்கும் ஆற்றலும் வந்துவிட்டால், அவன் நிச்சயம் ஒரு புரட்சியாளனாகவே மாறுவான் என்கிறார்.
இறுதியாக முடிவுரையில் பகத் சிங் கூறுவது இதுதான்.
“எனக்கு இந்தச் சுயநலமும் பலவீனமும் தேவையில்லை. தூக்குமேடையைக் கூட நான் ஒரு சுயமரியாதையுள்ள ஆன்ம பலம் கொண்ட மனிதனாகவே எதிர்கொள்வேன். இதை நீங்கள் ‘அகங்காரம்’ என்று சொன்னால், ஆம்… நான் அந்த அகங்காரம் உள்ளவன்தான்’’.
