மந்திரச்சொல்
ஒருவரது வாழ்க்கையை மாற்றும் சக்தி இல்லையென்பது போதாமை. இது, ஒரு பிரச்னை இல்லை. ஆனால், ஒருவரின் மனம் உடைவதற்கு காரணமாக மாறாமல் இருப்பதே மனிதநேயம்.
ஒருவருக்கு மருந்தாக இருப்பது, அவர்களின் துயரத்தைப் போக்குவது, வாழ்க்கையை மாற்றியமைப்பது, எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. எல்லோருக்கும் எல்லா நேரமும் உதவ முடியாது. நேரம், சூழ்நிலை, வசதி, வாய்ப்புகளுக்கு எல்லைகள் உண்டு. இது நியாயமானது. ஆனால், ஒருவரின் கண்ணீருக்கு காரணமாக இருப்பதே தவ்று.
ஏனென்றால்,. பெற்ற அன்பைவிட அடைந்த காயங்களையே மனம் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கிறது. ஒரு பாராட்டு சில மணி நேரம் மட்டுமே மகிழ்ச்சி தரும். ஆனால் அவமானம், அவமதிப்பு, துரோகம் காலம் முழுவதும் காத்திருக்கிறது.
பெற்றோர் கோபத்தில் கூறிய வார்த்தை, ஆசிரியர் வகுப்பில் செய்த அவமானம், ஒரு நண்பரின் துரோகம், ஒரு காதலரின் அலட்சியத்தால் தன்னம்பிக்கை குறைவு, பயம், உறவுகளில் நம்பிக்கையின்மை, மனஅழுத்தம் போன்ற பல உளவியல் பிரச்சினை உருவாகலாம். அதனால் ஒருவருக்கு கை கொடுத்து உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, கீழே தள்ளிவிட வேண்டாம்.
உண்மையான அன்பு என்பது விலையுயர்ந்த பரிசுகள் கொடுப்பதல்ல. எப்போதும் உதவி செய்வதும் அல்ல. எந்த சூழலிலும் பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதே தூய்மையான அன்பு.
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது அவரை காப்பாற்ற முடியவில்லை என்றாலும், இகழாமல் இருக்கலாம். தோல்வி அடைந்தவருக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும், கேலி செய்யாமல் இருக்கலாம். ஒருவருக்கு அவசர காலத்தில் பணம் கொடுத்து அல்லது நேரம் கொடுத்து உதவ முடியாமல் போகலாம். ஆனால் கடுமையான வார்த்தைகளால் நோகடிக்க அவசியமில்லை.
ஒரு மருத்துவர் எல்லா நோயாளிகளையும் காப்பாற்ற முடியாது. ஆனால் அலட்சியத்தால் நோயாளியை இழக்கக் கூடாது. ஆசிரியர் எல்லா மாணவர்களையும் முதல் மாணவராக்க முடியாது. ஆனால் யாருடைய கனவையும் சிதைக்கக்கூடாது. வாழ்க்கை பாட்னரின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற முடியாது. ஆனால் அவமரியாதை, அலட்சியம், பொய்மையால் மனதை நொறுக்கக்கூடாது. நண்பர் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. ஆனால் துரோகம் செய்யாமல் இருக்க முடியும்.
இங்கேதான் மனித உறவுகளின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. மன முதிர்ச்சி என்பது எத்தனை பேருக்கு உதவினோம் என்பதில் மட்டும் இல்லை. நம்மால் எத்தனை பேருக்கு தேவையற்ற காயம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம் என்பதிலும் இருக்கிறது.
சிலர் தாங்கள் செய்த நன்மைகளைப் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால் தாங்கள் ஏற்படுத்திய காயங்களை நினைக்க மாட்டார்கள். இந்த உலகத்தில் எல்லோருடைய கண்ணீரையும் துடைக்க நம்மால் முடியாது. ஆனால் நம்மால் யாருடைய கண்ணீருக்கும் காரணமாகாமல் வாழ முடியும். எல்லோருக்கும் ஒளியாக இருக்க முடியாவிட்டாலும், யாருடைய வாழ்க்கையிலும் இருளாக மாறாமல் இருக்க முடியும்.
உங்களால் முடிந்தால் ஆறுதலாக இருங்கள்; முடியாவிட்டால் அமைதியாக விலகுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
