வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்… இங்கிருந்து யாரும் உயிருடன் வெளியே போகமுடியாது.

மந்திரச்சொல்

இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கு ஏதேனும் ஒரு அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும், ஏதேனும் சாதிக்கவேண்டும் என்று சிலர் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். லட்சியத்துக்காக போராடலாம். ஆனால், இலக்கை அடையும் பயணத்தில் மகிழ்ச்சியை இழந்துவிடக் கூடாது.

இதற்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை நல்ல உதாரணம். அவர் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் மிகப்பெரிய இலக்குகளுடன் பயணித்தார். பயிற்சி, உடல் கட்டுப்பாடு, உணவு, உடற்பயிற்சி, போட்டி எல்லாவற்றிலும் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால் கொண்டாட்டத்தை அவர் ஒருபோதும் தவறவிட்டதில்லை.  : வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல. மனநலமும் குடும்பமும் மகிழ்ச்சியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அதனால், இலக்கை அடைவதற்காக ஓடுங்கள். ஆனால் ஓடும் வழியில் பூத்துக் கிடக்கும் பூக்களைப் பார்க்க மறந்துவிடாதீர்கள்.

நான் இந்தப் பதவியை அடைந்த பிறகுதான் மகிழ்ச்சியாக இருப்பேன், இந்த அளவு பணம் சம்பாதித்த பிறகுதான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவேன், இந்த இலக்கை முடித்த பிறகுதான் ஓய்வெடுப்பேன் என்று தொடர்ந்து தள்ளிப்போட்டால், இலக்கு கிடைத்தாலும் வாழ்க்கையின் பல அழகான தருணங்கள் திரும்பக் கிடைக்காது.

குழந்தையின் முதல் பள்ளி நாள், மகன் அல்லது மகளுடன் விளையாடிய ஒரு மாலை, பெற்றோருடன் சென்ற பயணம், நண்பர்களுடன் சிரித்த சில நிமிடங்கள், மனைவியுடன் வாக்கிங் போன்றவை மீண்டும் கிடைக்காது. வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போன்றது. இலக்கு முக்கியம். ஆனால் ஜன்னலுக்கு வெளியே ஓடும் அழகான காட்சிகளை ரசிக்கவில்லை என்றால், அந்த காட்சிகளை திரும்பவும் பார்க்க முடியாது.

எவ்வளவு வெற்றி பெற்றாலும், எவ்வளவு பணம் சேர்த்தாலும், எவ்வளவு புகழ் பெற்றாலும், இந்த வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. எதையும் யாரும் கொண்டுசெல்ல முடியாது. அதனால் முழு நேரமும் வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை.

யாராவது உங்களைப் பற்றி தவறாகப் பேசினால் உடனே மனம் உடைந்து போகாதீர்கள். யாராவது நிராகரித்தால், ‘எனக்கு மதிப்பே இல்லை’ என்று முடிவு செய்யாதீர்கள். ஒரு முயற்சி தோல்வியடைந்தால், எனக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும் என்று முடிவு கட்டாதீர்கள்.

ஒருவர் உங்களை விட்டு விலகினால், இனி நான் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று புலம்பாதீர்கள். ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக இருக்கலாம்; அது முழு புத்தகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பணம் சம்பாதியுங்கள்; ஆனால் பணத்துக்காக வாழ்க்கையை இழக்காதீர்கள். குடும்பத்தை நேசியுங்கள், அவர்களை இழந்த பிறகுதான் அவர்களின் மதிப்பு புரியும்படி வாழாதீர்கள். இலக்குகளை அடையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடையும் பயணத்தில் உங்கள் மகிழ்ச்சியைத் தொலைக்காதீர்கள்.

வாழ்க்கை குறுகியது என்பதால் அதை அதை அழகாக வாழ வேண்டும். நேற்று நடந்ததை மாற்ற முடியாது. நாளை என்ன நடக்கும் என்று முழுமையாக அறிய முடியாது.

நாம் எல்லோரும் இங்கிருந்து ஒருநாள் வெளியேறப் போகிறோம். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே. அதனால் செல்லும் முன், வாழ்க்கையை வெல்ல வேண்டும் என்பதற்குப் பதிலாக, வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment