மந்திரச்சொல்
ஒரு நண்பருக்கு பணம் தேவைப்பட்ட நேரத்தில், உங்கள் தேவையை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு மனப்பூர்வமாக உதவுகிறீர்கள். அவரது கஷ்டமான காலத்தில் அவருடன் நிற்கிறீர்கள். அவரது பிரச்சினைகளை உங்கள் பிரச்சினையாக நினைத்து தீர்த்துவைக்கிறீர்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ஒரு நெருக்கடி வருகிறது. நீங்கள் அவரிடம் உதவி கேட்கிறீர்கள். அப்போது அவர், ‘இப்போது என்னால் எதுவும் முடியாது’ என்று சிம்பிளாக தட்டிக்கழிக்கிறார். அந்த வார்த்தை உங்களுக்கு வலிக்கிறது. ஏமாந்துபோன உணர்வு வருகிறது. அவர் உதவவில்லை என்பதைவிட, நான் அவருக்கு செய்ததை அவர் நினைக்கவில்லை என்பதுதான் மனதை உலுக்குகிறது.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. நீங்கள் செய்த உதவி அன்பின் வெளிப்பாடு. அது அவரிடம் நீங்கள் வசூலிக்க வேண்டிய கடன் அல்ல. உங்களுடைய நியாயத்தை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், நீங்கள் உதவி கேட்டபோது அவரது மனநிலை, பொருளாதார நிலை எப்படியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. நான் நல்லவனாக இருந்தேன்; எனவே நீயும் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்.
பொதுவாக ஒருவருக்கு நல்லது செய்யும்போது, நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மனதிற்குள் ஒரு சிறிய கணக்கு ஓடிக்கொண்டிருக்கும். நான் உனக்காக இருந்தேன். நீயும் எனக்காக இருப்பாய் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறாதபோது, உதவி செய்த மகிழ்ச்சியே, கோபமாக மாறிவிடுகிறது.
உதவி செய்தவரிடம் பதிலுதவி எதிர்பார்ப்பது மனித இயல்பு. ஆனால் வாழ்க்கையின் கசப்பான உண்மை என்னவென்றால், நீங்கள் ஒருவரிடம் காட்டிய நியாயம், அன்பு, நேர்மை, தியாகம் ஆகியவற்றை அதே அளவுக்கு அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. நீங்கள் அவருடைய இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்த்தால், இந்த உண்மை புரியும்.
நமக்கு நியாயமாகத் தோன்றுவது அவருக்கும் நியாயமாகத் தோன்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேநேரம், திட்டமிட்டு ஏமாற்றும் நபரை ஏற்கவேண்டியதில்லை. செய்யும் உதவிகளுகு எல்லை வையுங்கள். உங்கள் அன்பைத் தொடர்ந்து சுயநலமாகப் பயன்படுத்துபவர்களை தூரம் வையுங்கள். உங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மரம் நிழல் தருகிறது. அதன் கீழ் நிற்பவர் அந்த மரத்திற்கு நன்றி சொல்லாமல் சென்றாலும், மரம் தனது நிழலை நிறுத்துவதில்லை. எனவே, நல்லவராக இருங்கள். ஆனால் எல்லையில்லாதவராக இருக்காதீர்கள். அன்பு கொடுங்கள். ஆனால் பதிலுக்கு அன்பை கட்டாயப்படுத்தாதீர்கள். உதவி செய்யுங்கள். ஆனால் உதவியை கடனாக மாற்றாதீர்கள். நம்புங்கள். ஆனால் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
நீங்கள் மற்றவர்களிடம் நியாயமாக நடப்பது உங்கள் குணம். நாம் மற்றவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது. மனநிம்மதி கிடைத்துவிடும். இந்த உலகம் உங்களிடம் நியாயமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டால் ஏமாற்றம் குறைகிறது. ஏமாற்றம் குறைந்த இடத்தில் மன அமைதி பிறக்கிறது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
