என்ன செய்தார் சைதை துரைசாமி – 287
பெருநகர சென்னையின் தீர்க்க முடியாத பிரச்னையாக நிலவிய கழிவறை தட்டுப்பாட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டார். அந்த வகையில் முதலில் கழிவறை இல்லாத வீடுகள் கட்டுவதற்கு அனுமதி முழுமையாக மறுக்கப்பட்டது. இதனால் இன்றைய பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தார்.
ஏனென்றால் பெருநகர சென்னையின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை கட்டுவதற்கு இடமே கிடையாது. ஏழெட்டு வீடுகளுக்கு பொதுவாக ஒரு கழிவறை இருப்பது சென்னையில் சர்வ சாதாரணம். வாடகை வீட்டில் குடியிருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் இந்த அவஸ்தைகளுடன் வாழ்கிறார்கள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கு 5,000 நவீன பொதுக் கழிவறைகள் கட்டுவதற்கு சைதை துரைசாமி திட்டமிட்டார். பெருநகர சென்னைக்கு 5,000 என்ற எண்ணிக்கையே குறைவு என்றாலும், முதலில் இந்த அளவுக்காவது தொடங்கவேண்டும் என்று செயல்திட்டம் வகுத்தார்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மேயர் சைதை துரைசாமிக்கு இந்த விஷயத்தில் கடுமையான எதிர்ப்பு வந்தது. அதாவது, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், எங்கள் கடைக்குப் பக்கத்தில், எங்கள் தெருவில் பொதுக் கழிவறைகள் கட்டக் கூடாது என்று எக்கச்சக்க எதிர்ப்புகள் வந்தன. ஏற்கெனவே பொதுக் கழிவறையைக் கட்டணக் கழிவறையாக மாற்றி பணம் சம்பாதிக்கும் சிலர் மக்களையும் கட்சியினரையும் தூண்டிவிட்டனர்.
பொதுக் கழிவறை திட்டம் என்பது ஆரோக்கியமானது என்ற சிந்தனை மக்களிடம் எழாமல் போனதும், பொதுக்கழிவறையை மோசமான கண்ணோட்டத்தில் பலரும் பார்த்ததாலும் மேயர் சைதை துரைசாமியின் திட்டத்துக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.