என்ன செய்தார் சைதை துரைசாமி – 243
பாதசாரிகள் நன்மைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய இயந்திர வாகனம் சாரா போக்குவரத்துக் கொள்கையை முதன்முதலாக பெருநகர சென்னையில் அறிமுகம் செய்து அறிமுகம் செய்து, சாலை மேம்பாட்டுக்கு வழி வகுத்தார் மேயர் சைதை துரைசாமி. சாலையோர சாய்தள நடை பாதைகளையும் மாநகராட்சி செலவிலே மேற்கொண்டு ஒரு புதிய வழி காட்டினார்.
அப்படி நடைபாதை அமைக்கும்போது மின்சாரத் துறை, தொலைபேசித் துறை மற்றும் பிற சேவை நிறுவனங்களின் சாதனங்கள் இடையூறாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட துறையின் மூலம் மாற்றி அமைப்பது என்றால் கால தாமதம் ஏற்படும் என்பதால், இவற்றை மாற்றி அமைப்பதற்குத் தேவையான செலவையும் மாநகராட்சியே மேற்கொண்டது.
அதனாலே பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் திட்டமிட்டபடி 34 பேருந்து சாலைகளில் நடைபாதை வடிவமைக்கப்பட்டது. அதேபோன்று பிற சேவை நிறுவனங்களின் வயர்கள் செல்வதற்குத் தனியாக குழாய்கள், காங்கிரீட் பெட்டகங்கள் நடைபாதையில் இடைஞ்சல் இல்லாமல் அமைக்கப்பட்டன.
நடைபாதை எத்தனை சிறப்பாக வடிவமைப்பு செய்தாலும், அதில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பாதசாரிகளுக்குத் தொந்தரவு தரும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. அதோடு சாலையில் போக்குவரத்து மிகவும் மெதுவாக இருக்கிறது என்றால் நடைபாதையில் ஏறி இருசக்கர வாகனத்தில் செல்வார்கள். இதனால் பாதசாரிகளுக்கும் வாகனவோட்டிகளுக்கும் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு.
ஆகவே, நடைபாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கமான கிரானடைட் தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. இதனால் பாதசாரிகள் எந்த இடையூறும் இல்லாமல் நடைபாதையில் நடப்பதற்கு முடிந்தது. இப்படி பாதசாரிகள் பாதுகாப்புக்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட பணிகளுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமின்றி மத்திய அரசின் திட்டத்தை சிறப்புற செயல்படுத்திய பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தேசிய அளவிலான 5 விருதுகளும், ஒரு சர்வதேச விருதும் கிடைத்தது. இந்த விருதுகளுக்கு முழு சொந்தக்காரர் மேயர் சைதை துரைசாமி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
- நாளை பார்க்கலாம்.