மாநகராட்சி மாணவர்களுக்கு 48 நலத் திட்டங்கள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 147

நம் தமிழகம் கல்வியில் மற்ற அனைத்து மாநிலங்களை விடவும் முன்னேறியதாக இருக்கிறது என்றால் அதற்கு விதை போட்டவர் பெருந்தலைவர் காமராஜர். ஒரு வகுப்பில் ஏழெட்டு மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்ட சூழலில், எல்லோருக்கும் சத்துணவுத் திட்டத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்து மாபெரும் புரட்சியை உருவாக்கினார். அடுத்த கருணாநிதி ஆட்சியில் முட்டை வழங்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்தில் கலவை சாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு ஏராளமான நலத் திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் சரியாகக் கிடைக்கிறதா என்பதை மேயர் சைதை துரைசாமி மிகவும் அக்கறை எடுத்துக் கவனித்தார். இந்த வகையில் மாணவர்களுக்கு மதிய நேர சத்துணவு, முட்டை, வாழைப்பழம், சுண்டல், கலவைச் சாதம், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடைகள், மலைவாழ் மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா கம்பளி ஆடை, விலையில்லாக் காலணிகள், கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகை, விலையில்லா கணித வரைகலைப்பெட்டி, கலர் பென்சில்கள், கிரையான்கள், உலக வரைபடப் புத்தகம் என்று ஏராளமான உதவிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மேயராக சைதை துரைசாமி பதவியேற்றதும் மாநகராட்சி சார்பாக மேற்படிப்பு ஊக்கத் தொகை, மதிப்பெண் ஊக்கத் தொகை, மாநில அளவில் முதலிடம் பெற சிறப்பு பயிற்சி, மாநில அளவிலும், மாநகராட்சி பள்ளி அளவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை, வட இந்திய சுற்றுலா, விடுப்பின்றி பள்ளிக்கூடம் வருவோருக்கு ஊக்கத் தொகை, தேர்வு விடைத்தாள், செய்முறை பயிற்சி ஏடு, ஆய்வுக்கூட மேற்சட்டை, ஒவ்வொரு வகுப்பிற்கும் நாளிதழ் என மொத்தம் 48 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 2011-க்குப் பிறகு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்குக்கூட கிடைக்காத பல நலத்திட்டங்களை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment