என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 134
யார் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அதை அப்படியே நம்புவதும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சைதை துரைசாமியின் பழக்கம் இல்லை. எந்தக் குற்றச்சாட்டு என்றாலும், அது குறித்து முழுமையாக விசாரித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவார். அப்படித் தான், மாநகராட்சி புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது வந்த புகார் குறித்தும் அவரே சம்பந்தப்பட்ட எண்ணுக்குத் தொடர்பு கொண்டார்.
அவரது தொலைபேசி எடுக்கப்படவில்லை என்றதும் நேரடியாக 1913 செயல்படும் அறைக்கு நேரில் சென்றார் சைதை துரைசாமி. அங்கு சென்ற பிறகு தான், புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பு நவீனத்துவம் பெறவில்லை என்பதும் தொலைபேசிகளை எடுத்துப் பேசுவதற்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த குறைபாடு காரணமாகவே 1913 பிரிவில் புகார்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவதில்லை என்பதும் தெரியவந்தது. இந்தக் குறையை மறைப்பதற்காக, தினமும் குறிப்பிட்ட அளவில் புகார்கள் பெறப்படுவதாக பொய் தகவல் கொடுத்துவரப்படுவதும் அறிந்துகொண்டார்.
இதையடுத்து மேயர். சைதை துரைசாமி ஆலோசனைப்படி இந்தப் புகார் பிரிவு 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடனடியாக நவீனமாக்கப்பட்டது. காலை, மாலை, இரவு என ஷிப்ட் முறையில் பணியாற்ற 23 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள். கம்ப்யூட்டர் பதிவுகள் நவீனமயமாக்கப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக பதிவு செய்யப்பட்டன. புகார் கொடுத்தவர் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம், அவரது புகார் பதிவு உறுதி செய்யப்பட்டது. மிஸ்டு கால் கொடுத்தவர்களையும் தொடர்புகொண்டு குறை கேட்கும் அளவுக்கு இந்தப் பிரிவு சுறுசுறுப்படைந்தது.
இந்த நடவடிக்கை மட்டும் போதாது என்று நினைத்த மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி, புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரியே, புகார் கொடுத்தவருக்குத் தகவல் தெரிவிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த செய்தி சென்னை மக்களிடம் பரவி மாபெரும் வரவேற்பை பெறத் தொடங்கியது.
- நாளை பார்க்கலாம்.