ஐ.டி. ஊழியர்களுக்கு இனி 14 மணி நேர வேலை..?

Image

தயாராகும் புதிய சட்டம், அலறும் ஊழியர்கள்.

உடல் உழைப்பு தரும் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலையும் ஐ.டி. ஊழியர்களுக்கு 10 முதல் 12 மணி நேர வேலையும் இப்போது சட்டமாக இருக்கிறது. இதனை 14 மணி நேர வேலையாக மாற்ற வேண்டும் என்று ஐ.டி. நிறுவனங்கள் குரல் எழுப்பியிருப்பது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவில் முதல் குரல் எழுந்துள்ளது.  

தற்போது, ​​தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. ஆனால், IT துறையின் புதிய முன்மொழிவில், “IT/ITeS/BPO ஆகிய துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலைநேரம் இருக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ஐடி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கல், ‘’இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைமுறையில் உள்ள மூன்று ஷிப்ட் முறைக்கு பதிலாக இரண்டு ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் உண்டு.

ஐடி துறையில் 45 சதவீத ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளையும், 55 சதவீத பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இதற்கிடையே, வேலை நேரத்தை மேலும் அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். அரசு ஊழியர்களை மனிதர்களாகப் பார்க்காமல் வெறும் இயந்திரங்களாகப் பார்க்கிறது. தொழிலாளர்களை மனிதர்களாகக் கருத கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இந்தச் சட்டத் திருத்தம் காட்டுகிறது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை இந்த அரசு கருதுகிறது” என்று கடுமையாக எதிர்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி, “இந்தியாவில் வேலை சார்ந்த உற்பத்தித்திறன் உலக அளவில் குறைவாக உள்ளது. அதன் காரணமாக இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என” கூறியது மிகப்பெரிய விவாதப் பொருளான நிலையில், இந்த கோரிக்கை அத்தனை ஐ.டி. ஊழியர்களையும் அலற வைத்திருக்கிறது.

Leave a Comment