விளையாட்டு வீராங்கனை
‘என் இறுதி மூச்சுவரை ஓடிக்கொண்டு இருக்கவே விரும்புகிறேன்’ என்று கூறிய நம்பிக்கையாளர் நூறு வயதை கடந்த அதிவேகமாக ஓடும் தடகள வீராங்கனையான மான் கவுர். ‘சண்டிகரின் அதிசயம்’ என்று அழைக்கப்படும் இவருடைய சாதனையை மையப்படுத்தி, மத்திய அரசு இவருக்கு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்தில், நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.
105 வயதில் மரணம் தழுவிய மூதாட்டியான மான்கவுர், 100 வயதுக்கும் மேற்பட்டோருக்கான தடகளப் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்; பல தங்கப் பதக்கங்களை வென்றவர். கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி மற்றும் குண்டு எறிதல் என நான்கு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2018ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாக்காவில் நடைபெற்ற 100 – 104 வயதுடையவர்கள் பங்கேற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன் போட்டியில் கலந்துகொண்ட மான் கவுர், 200 மீ்ட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதுதவிர ஈட்டி எறிதல் போட்டியிலும் மான் கவுர் தங்கம் வென்றார். இதற்கு முன் 2017ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்ட மான் கவுர், பந்தய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் (74 நொடிகளில்) கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே தூரத்தை 2009ல் 64.42 வினாடிகளில் அவர் கடந்து சாதனை படைத்தவர் என்பதும், 2017ம் ஆண்டு பெண்களுக்கான பிங்கத்தான் ஓட்டப்போட்டிக்கு தூதுவராக மான் கவுர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மான் கவுர்?
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த மான் கவுர், கடந்த 1916ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர். 1934ம் ஆண்டு திருமணம் முடிந்த கையோடு கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் என குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய இரண்டாவது மகன் குருதேவ் சிங், சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்தே விளையாட்டுப் போட்டிகளில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை தனது மகன் குவித்திருந்ததைப் பார்த்து தானும் தடகள வீராங்கனையாக உருவாக வேண்டுமென்ற ஆசை, மான் கவுருக்கு வந்துள்ளது. அதுவும் அவருடய 93வது வயதில் வந்தது பெரிய விஷயம். தனது விருப்பத்தை மகனிடம் சொல்லிய அடுத்த நொடியே மறுப்பு ஏதும் சொல்லவில்லை, குருதேவ். நடை பழக்கிய தாய்க்கு தடகளத்தில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார், மகன். அதற்காக, முதலில் அவரை உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வலியுறுத்தி இருக்கிறார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, 2009 முதல் தடகள பயிற்சியை ஆரம்பித்த மான் கவுர்தான் இன்று, உலகிலேயே நூறு வயதை கடந்த அதிவேகமாக ஓடும் தடகள வீராங்கனையாக இருக்கிறார்.
பயிற்சிக்காக, தினந்தோறும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் மான் கவுர், தனது வேலைகளையெல்லாம் இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு, ஆறு மணிக்கெல்லாம் பயிற்சிக் களத்துக்குச் சென்றுவிடுவாராம். நாற்பது நிமிடங்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு பிறகு வீடு திரும்பும் மான் கவுர், தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் 2009ல் தொடங்கிய அவருடைய பயிற்சிப் பயணம் இன்றுவரை நீடிக்கிறது. ஓட்டம் தவிர, குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலிலும் அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.
ஆரம்பத்தில் தேசிய அளவில் தனது திறமைகளை வெளிக்காட்டிய மான் கவுர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ஈட்டி மற்றும் குண்டு எறிதலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தவிர, சர்வதேச அளவிலான முதியோர் தடகள போட்டிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். கனடா, மலேசியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், தைவான் என சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் மொத்தமாக 31 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மான் கவுரின் சாதனை குறித்து அவரது மகன் குருதேவ், ‘முதன் முதலில் அம்மாவை 400 மீட்டர் ஓடச்சொல்லிப் பார்த்தேன். ஆரோக்கியமான உடல்வாகு அம்மாவுக்கு கைகொடுக்க, அந்த இலக்கைப் பொறுமையாக ஓடிக் கடந்தார். அதைப் பார்த்ததுமே அம்மாவால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது’ என்கிறார்.
‘கோதுமை ரொட்டிதான் எனது உணவு. நன்றாகச் சாப்பிடுவதும், அதற்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி மேற்கொள்வதும் எனது நீண்ட ஆயுளுக்குக் காரணம். என்னுடைய மகன் குருதேவ் சிங்தான் நான் ஓட்டப்போட்டியில் பங்கேற்க காரணமாகும்’ எனச் சொல்லும் மான் கவுர், ‘என்னைப்போலவே இந்தியாவில் வளர்கிற ஒவ்வொரு பெண் பிள்ளையும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, ஆர்வம் இருந்தால் விளையாட்டிலும் கவனம் செலுத்தலாம்’ என்று ஆலோசனை வழங்குகிறார்.
மான்கவுர் குறித்து நடிகர் மிலிந்த சோமன், ‘நான் பார்த்தவகையில், அனைத்து வயதினருக்கும் ஊக்கமளிக்கும் பெண் மான்கவுர். பிங்கத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்று ஏராளமான நாடுகளுக்குச் சென்று பெண்களின் மனநிலை, உடல் நிலை குறித்து விழிப்புணர்வு ஊட்டியுள்ளார். பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக கவுர் இருந்தார்’ என்கிறார்.
உண்மையில் மான் கவுர், சண்டிகருக்கு மட்டும் அதிசயமல்ல, உலகிற்கே அதிசயம்தான்