எளிமையே இவரது சொத்து
டீ, பன் சாப்பிட்டுவிட்டு தோழர்களின் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஒரு தலைவன், நல்லகண்ணு. நூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதனே புதிய இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம். நூறாண்டு தொடங்கும் நல்லகண்ணுவின் வாழ்க்கையை எளிதில் சுருக்கிவிட முடியாது என்றாலும், இன்றைய தினத்தில் சொல்லப்பட வேண்டிய வாழும் வரலாறு அவர்.
வைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 26.12.1925 அன்று 3வது குழந்தையாக நல்லகண்ணு பிறந்தார். இதேநாளில் அதாவது 1925, டிசம்பர் 25, 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நல்லகண்ணுவுக்கும் ஒரே வயது.

அவரது அரசியல் பயணம் பற்றி அவரே கூறுவதைக் கேட்கலாம். “நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தபோது, விடுதலைப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. எங்கள் பகுதியில் நடைபெற்ற எல்லா போராட்டங்களிலும் நானும் என் நண்பர் முத்தையா பிள்ளையும் கலந்துகொண்டு, முதல் வரிசையில் நிற்போம். `என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்… என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்…’ என்ற பாடலை வீதிவீதியாகப் பாடிச்செல்வோம். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அந்தப் பாடல் நினைவுக்கு வரும். அப்போது, நான் அழுதுவிடுவேன்.
என் கவனம் முழுவதும் போராட்டத்தில்தான் இருந்தது. பள்ளிக்கூடம் ஒரு பொழுதுபோக்கு இடமாகத்தான் இருந்தது. ஆனாலும், வகுப்பில் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் பெற்று பரிசுகள் வாங்கியுள்ளேன். ஒருமுறை பள்ளிக்கூட ஆய்வுக்கு மாவட்டக் கல்வி அதிகாரி வந்தார். அப்போது, என்னுடைய நோட்டில் பகத்சிங் பற்றி எழுதிவைத்திருந்தேன். அதை என்னுடைய வாத்தியார் பார்த்துவிட்டு, கோபத்தில் என்னைப் பெஞ்சு மீது நிற்கவைத்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த எனக்கு, பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டேன். 1943-ம் ஆண்டு எனக்கு 18 வயது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் கிளைச் செயலாளரானேன். அந்த நேரத்தில் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு கோட்டை இருந்தது. அதற்குப் பத்தினிக்கோட்டை என்று பெயர். அதற்குள் அந்நிய ஆண்கள் யாரும் செல்ல முடியாது. ஆண் குழந்தைகளைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். அதிகாரிகள் கூட கவர்னரிடம் அனுமதி வாங்கித்தான் கோட்டைக்குள் செல்ல வேண்டும். அந்தக் கோட்டைக்குள் நெல்மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அது குறித்து ஆர்.டி.ஓ-வுக்குக் கடிதம் எழுதினேன். உடனே, அதிகாரிகள் கோட்டைக்குள் சென்று ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல் செய்தனர். அந்தச் சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாவடுதுறை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர், நாங்குநேரி ஜீயர் என அந்தப் பகுதியில் மடங்களுக்கு ஏகப்பட்ட சொத்து உண்டு. மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்பவர்கள், எதையுமே பூமியைத் தோண்டி வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல்லை கூட பூமியைத் தோண்டி புதைக்கக் கூடாது. நிலைக்கதவு போடக் கூடாது. வீட்டு முன்பாக திண்ணை போடக் கூடாது. `கிளம்பு’ என்று சொல்லிவிட்டால், தட்டுமுட்டு சாமான்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட வேண்டும். ஆகவே, அவர்களுக்கு `ஓடுங்குடிகள்’ என்று பெயர். மடங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினோம். ஆதிக்க சக்திகளுக்கு எங்கள் மீது கடும் கோபம். ஆனாலும், எங்கள் போராட்டம் வெற்றிபெற்றது. `ஓடுங்குடிகள்’ எல்லாம் நிரந்தரக்குடிகளாக மாறின.
நாங்குநேரி பகுதியில் விவசாயிகளின் உரிமைகளுக்காக சங்கம் அமைக்கப்பட்டது. `தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினோம். காவல்துறையினரின் அச்சுறுத்தல், மிராசுதார் அடியாட்களின் மிரட்டல்கள், அவர்களுடன் மோதல்கள் என்பதெல்லாம் அந்த நாள்களில் எங்கள் வாழ்க்கையில் சகஜமாக இருந்தது” என்கிறார் நல்லகண்ணு.
1950-ம் ஆண்டு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நெல்லை சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு போடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளைக் கவிழ்க்க பொது வேலைநிறுத்தங்களுக்குத் தூண்டிவிடுவது, ஆயுதம் தாங்கிய புரட்சியை நடத்துவது, அதற்காக மாவட்டம் முழுவதும் வன்முறை மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது, அதற்குத் தடையாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்டுவது, தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயுதப்பயிற்சி அளிப்பது, வெடிகுண்டுகள் தயாரிப்பது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
மீளவிட்டான் என்ற இடத்தில் சரக்கு ரயில் வண்டியைக் கவிழ்த்தது, போலீஸ் உளவாளி ஒருவர் கொலை செய்யப்பட்டது, பதுக்கல் நெல்லைக் கண்டுபிடித்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தது எனப் பல குற்றச்சாட்டுகளில் நல்லகண்ணு உட்பட 109 பேர் 1949-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில், 1952-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உள்ளிட்ட பலருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 27 வயது.
மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நல்லகண்ணுவுக்கு `கைதி எண் 9658′ வழங்கப்பட்டது. சிறையில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நடந்தன. அதற்கு எதிராக சிறைக்கு உள்ளேயும் பல போராட்டங்களை நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் நடத்தினார்கள். அதன் பிறகு, சிறைக் கைதிகளுக்குப் பல உரிமைகள் கிடைத்தன. சிறையில் ஒரு நூலகம் இருந்தது. அதன் பொறுப்பாளராக நல்லகண்ணு இருந்தார். கைதிகளுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று சிறைக்குள் அவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். அதன் பிறகு சிறைக்குள் இருந்த பல தோழர்கள் இ.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். அவர்களுக்கு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆசிரியர்களாக இருந்தனர்.
நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்கள் வலுத்தன. அதையடுத்து, அவர்களை விடுதலை செய்வதென்று அரசு முடிவு செய்தது. 1956 டிசம்பர் 13-ம் தேதி அவர்களின் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. ஏழு ஆண்டு கால சிறைவாசத்துக்குப் பிறகு நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் வெளியே வந்தனர்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தாலும், சமூக விடுதலையும் பொருளாதார விடுதலையும் அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. ஆகவே, மக்களுக்கான போராட்டங்களை இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் நல்லகண்ணு. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை நடத்தி, அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். தாமிரபரணி நதியை மணல் மாஃபியாக்களிடமிருந்து பாதுகாத்தார் நல்லகண்ணு. அதற்காக உயர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி, அவரே வாதாடினார். தாமிரபரணியில் மணல் அள்ளத் தடைவிதித்தது நீதிமன்றம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டில் அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார். பணம், சொத்து, புகழ் போன்றவைகளை இவர் என்றும் விரும்பியதே இல்லை. எளிமை என்பதற்கு இலக்கணமாக இன்றும் வாழ்ந்துவருகிறார். இன்றும் போராட்டம் என்றால் முதல் நபராக இருக்கிறார்.
இப்படியொரு தலைவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்தவும் ஆவணப்படுத்தவும் வேண்டும். அப்போது தான் புதிய தலைமுறையினருக்கு அரசியல் மீது கொஞ்சமாவது நம்பிக்கை வரும்.