உங்களுக்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா?

Image

பத்திரமா வைச்சுக்கோங்க.

தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மனிதர்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இவற்றை விட விலை மதிப்புள்ள ஒன்றை மட்டும் மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள், அது என்னவென்று தெரியுமா..?

சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு காரணமாக, செயற்கை சிறுநீரகம் பொருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. 50 லட்ச ரூபாய் செலவழிக்கத் தயாராக இருந்தாலும், அவருக்கு ஏற்ற சிறுநீரகம் கிடைக்கவில்லை.

கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொண்ட நபர் ஒருவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு செயற்கை பல் பொருத்தியிருக்கிறார். ஒரு பல்லின் விலை இத்தனை ஆயிரம் ரூபாய் என்பது, அதனை இழக்கும் வரையில் நண்பருக்குத் தெரியவில்லை.

மாற்று இதயம் பொருத்த வேண்டுமென்றால் கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. செயற்கை இதயம் பொருத்துவதற்கு 60 லட்சம் வரை செலவாகிறது.

இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் விலை வைத்துப் பார்த்தால், மனிதரின் உடல் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புமிக்கது. இத்தனை மதிப்பு வாய்ந்த உடலுக்குப் போதிய மதிப்பும், பாதுகாப்பும் கொடுக்கிறோமா?

நோய் அல்லது வலி வரும் வரை யாரும் உடல் பற்றி கவலைப்படுவதில்லை. ருசிக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமில்லாத உணவு என்று தெரிந்தும் கண்டதையும் சாப்பிடுகிறார்கள். உடல் உள்ளுறுப்புகளுக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தாலும் மது குடிக்கிறார்கள். அஜாக்கிரதையாக வாகனத்தில் பயணித்து கை, கால், உயிரை இழக்கிறார்கள்.

நோய் என்று வந்த பிறகு, உடல் உள்ளுறுப்புகள் சேதமடைந்த பிறகு லட்சம் லட்சமாக செலவழிப்பதால் எந்த பயனும் இல்லை. இந்த உடல் மட்டுமே உங்கள் சொத்து என்பதைப் புரிந்துகொண்டு உடலைக் காதலியுங்கள்.  

அதுவே, ஆரோக்கியம். அதுவே ஆனந்தம்.

Leave a Comment