Dr.ராஜராஜன் வெங்கடேசன், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
மனிதர்களின் உள்ளுறுப்புகளில் எத்தனையோ வகையில் நோய் வருகிறது. ரத்தக்குழாய்களில் உண்டாகும் பிரச்னைகள் குறித்து தெளிவாக விளக்குகிறார் மருத்துவர்.
மனித உடலில் இருதயம் தவிர்த்த பல்வேறு உறுப்புகளுடன் தொடர்புடைய ரத்தக் குழாய் எனப்படும் ரத்த நாளங்களில் உண்டாகும் பாதிப்புகளை வாஸ்குலர் டிசீஸ் என்று சொல்கிறோம். இதில் நல்ல ரத்த நாளங்கள் (தமனிகள்), கெட்ட ரத்த நாளங்கள் (சிரைகள்) என்று இரண்டு வகைகள் உள்ளன. இந்த தமனிகளில் பெரிய, சிறு தமனிகள் உள்ளன. இதுபோலவே பெரிய சிரைகள், சிறு சிரைகளும் உள்ளன.

இப்படி ரத்தக் குழாய்களில் வரக்கூடிய நோய்களுக்கு காரணங்கள் என்று பார்த்தால் ரத்தக் குழாய்களின் சுவர்களில் தொல்லை வந்தாலோ, ரத்தக் குழாய் சுவர் கிழிந்தாலோ, அடைப்புகள் வந்தாலோ, ரணம் ஏற்பட்டாலோ வாஸ்குலர் டீசீஸ் வரலாம்.
அதேபோல, அடிபடுதல், விபத்துகளில் காயம் ஏற்படுவதாலும், எலும்பு முறிவினாலும் ரத்தக்குழாய் நோய்கள் வரலாம். ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் உறைவதாலும் இத்தகைய பாதிப்பு வரலாம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து படிந்து ரத்தக்குழாய் தடிமனாகிவிடலாம்.
கொழுப்பு படிவதனால் வரும் பாதிப்பு உடலில் எந்த ரத்தக் குழாய்களில் வேண்டுமானாலும் வரலாம். இருதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்தால் அது மாரடைப்பை ஏற்படுத்தலாம். மூளைக்கு போகும் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்தால் ஸ்ட்ரோக் வரும். இதுபோல கிட்னி, சிறு மற்றும் பெருங்குடல் ரத்தக் குழாய்களில் பாதிப்பு வரலாம். கால்களுக்கு போகும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு வந்தால் காலை இழப்பதற்குக்கூட வாய்ப்பு உண்டு.
இப்போது பெரிபெரல் ஆர்ட்டரி டீசிஸ் (PAD) என்று பிரிவாகப் பிரித்துள்ளனர். பெரிபெரல் என்றால் வெளிச்சுற்று, ஆர்ட்டரி என்றால் ரத்த நாளங்கள் எனும் அர்த்தத்தில் இதயம் தவிர்த்த கை, கால்களில் உள்ள ரத்தநாளங்களில் வரும் பாதிப்புகளுக்கு இந்தப் பெயராகும்.
இந்த PAD ஏன் வருகிறது?
சர்க்கரை நோய், ரத்த அழுத்த பாதிப்புகள், புகைப்பது, புகையிலை தொடர்பான வஸ்துக்களை பயன்படுத்துவதால், உடல் பருமன், எந்த உடற்பயிற்சி இன்மை, உடலுழைப்பு இல்லாமையினால் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பவர்களுக்கு ஏற்படலாம்.
இந்தியாவில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது அதிகம். இவர்களுக்கு இந்த PAD இருக்க 50 சதவீதம் வாய்ப்பு உண்டு. எனவே சர்க்கரை நோயுடன் ரத்த நாளப் பாதிப்புகளும் இணைந்தால், கால்களில் புண் வர வாய்ப்பு அதிகம். கால்களில் இந்தப் புண் வந்தால் ஆறவே ஆறாது.
எங்களிடம் காலில் புண்ணுடன் ஒரு நோயாளி வந்தால் அவரை முழுவதுமாக சோதித்து நாடித் துடிப்பையும் அதையடுத்து ரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்றும் பார்ப்போம். அப்படி வருபவர்களுக்கு நாடி துடிப்பு இல்லையெனில் அவர்களுக்கு இந்த PAD இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம். இதை எல்லாம் பரிசோதிக்காமல் வேறு வேறு சிகிச்சை செய்தால் காலையே இழக்க நேரிடும். அடுத்ததாக ரத்தக் குழாய்களில் செல்லும் ஆக்சிஜன் அளவும் முக்கியமானது.
ஐந்து ஆண்டுகள் கட்டுபாடு இல்லாத சர்க்கரை நோயும் கூடவே PADயும் இருந்தால் அவர்களுக்கு நரம்பு தளர்ச்சி (பெரிபரல் நிரோபதி) வரலாம். அதாவது நரம்புகளின் செயல்பாடு குறைந்துவிடும். நடப்பது மேகத்தில் நடப்பது மெது மெது என்றிருக்கும். சிலருக்கு குளிர்ந்த நீர் எது? சுடு நீர் எது என்கிற வேறுபாடு தெரியாது. முள் குத்தினால் தெரியாது. எலி கடித்தால் தெரியாது. இன்னும் சிலருக்கு கிருமி தொற்றினாலும் கால்களின் புண் தீவிரமாகலாம். வெகு சிலருக்கு மட்டும்தான் பரம்பரை காரணமாக வரலாம்.
சிலருக்கு திடீர் கால் வீக்கம் ஏற்படும். அப்படி இருப்பவர்களை பரிசோதித்தால் அவர்களு உள் சிரை ரத்த நாள பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். எனவே யாருக்காவது திடீர் கால் வீக்கம் இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி டாபளர் டெஸ்ட் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இப்படியான பாதிப்புகளை சரி செய்வதற்கு நவீன சிகிச்சைகள் இந்த நாளில் வந்துள்ளன.
ரத்தக் குழாய் வெடித்து சிலர் இறக்க நேரிடலாம். aneurysm எனப்படும் பெரிய ரத்த நாளங்களின் உள் விட்டம் அதிகமாவதால் ஏற்படும். இதனை முன் கூட்டியே அறிந்து, எண்டோ வாஸ்குலர் அனுரிசம் ரிப்பேர் (EVAR) எனும் நவீன சிகிச்சை முறையும் இன்றைய நாளில் வந்துள்ளது.
.பல் வேறுவிதமான ரத்த நாள அடைப்புகள், பாதிப்புகளை இன்றையநாளில் ஆஞ்சியோகிராம் எனும் சோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையினை வழங்கலாம். இதற்கு இரண்டு வகை சிகிச்சைகள் உள்ளன. 1. எண்டோ வாஸ்குலர் (ரத்தக் குழாய் வழியாகவே சிகிச்சை செய்வது) 2. பாதிப்பு தீவிரமாக இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.
காலில் சிலருக்கு சிரை சுருட்டல் (varicose veins) எனும் பாதிப்பு நீண்ட நேரம் நின்று கொண்டே பணிபுரிபவர்கள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு வரலாம். இந்த பாதிப்பினையும் இன்றைய நவீன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம்.
வாஸ்குலர் அறுவை சிகிச்சை
ரத்தக்குழாயில் அடைப்பு, குறுகுதல்,பலவீனமடைதல் போன்ற பிரச்னைகளுக்கு வாஸ்குலர் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். வாஸ்குலர் அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது உறுப்புக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வரக்கூடிய சிக்கல்களைத் தடுத்துவிட முடியும்.
நோய் ஆரம்பத்தில் கண்டறியப்படும்போது வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் பொருத்துதல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் பலனளிக்காதபோது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபரின் சூழ்நிலையின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை, எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை, அல்லது திறந்த அறுவை சிகிச்சைகள் எனத் திட்டமிடப்படுகிறது.
எனவே ஆறாத கால் பண்கள் அல்லது கால் வீக்கம் இருந்தால் ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்.