ஞானகுரு பார்வை
கேள்வி : விஜய்யின் அரசியல் வாழ்வு பிரகாசிக்குமா..?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
மக்கள் மீது உண்மையிலே அன்பு வைத்திருந்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். அவர் தன்னுடைய படங்களில் குடிப்பதில்லை, பொய் சொல்வதில்லை, கொலை செய்வதில்லை. பெரியவர்களை மதிப்பார், பெண்களுக்கு மரியாதை கொடுப்பார். குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று பாடம் நடத்துவார். அதனால் தான் அவரை வாத்தியார் என்று கொண்டாடினார்கள், மரணம் வரையிலும் ஓட்டுப் போட்டார்கள்.
ஒவ்வொரு படத்திலும் சரக்கு அடித்து, தம்மடித்து, ஒரே அடியில் பத்து பேரை கொலை செய்து வன்முறையை தூக்கிப்பிடிக்கும் விஜய்க்கு மக்கள் மீது உண்மையிலே அன்பும் அக்கறையும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா..?
ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டு நடிக்கிறார் நடிகர் விஜய். 2026 தேர்தலில் அரசியல் கட்சித் தலைவராக நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சிறுபான்மை வாக்குகள் அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ வாக்குகள், புதிய வாக்காளர்கள், பெண்கள் வாக்குகளை சிதறடிப்பதற்கான அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜெயித்தால் அரசியலில் தொடரலாம் தோற்றுப்போனால் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பலாம். அவ்வளவு தான். 2024 தேர்தலில் அவர் ஏன் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள், கணக்கு புரியும்.
இடையில் ஜனநாயகன் திரைப்படமும் மத்திய அரசு கோபமும் ஒரு பொய் நாடகம் மட்டுமே. மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர். தமிழகத்துக்கு இல்லை என்பதே உண்மை.
