கேள்வி : ஆத்திகம், நாத்திகம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? – ஜி.ரத்தினம்மாள், பாளையங்கோட்டை
ஞானகுரு :
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே ஆத்திகமும் நாத்திகமும் இருக்கின்றன. தனக்குத் தெரியாததை, தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தனக்குத் தெரியாத எல்லாமே கடவுளின் லீலை என்பவன் ஆத்திகன். கடவுள் என்று பெயர் சூட்டியவனும், கடவுளுக்கு உகந்த மந்திரங்களையும், கடவுள் பற்றிய அத்தனை கருத்துக்களையும் உருவாக்கியவர்கள் ஆத்திகர்கள்தான்.
இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக கருதுகிறது வரலாறு. நபிகளுக்கு முன்னரே ஏராளமான நபிகள் வந்து போயிருக்கிறார்கள் என்பதால் அவரையும் ஒரு சாதாரண மனிதராகவே சரித்திரம் குறிக்கிறது. ராமனையும் கிருஷ்ணனனையும் புராண மாந்தர்களாகவே பார்க்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதி. இயேசு வருகிறார் என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பார்களே தவிர, அவர் ஒருபோதும் வரவே மாட்டார். எனவே, கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் இந்த போராட்டமும் நடந்துகொண்டே இருக்கும்.
துன்பம் வரும் நேரங்களில் ஆத்திகன் திடீரென கடவுள் மீது சந்தேகப்படுகிறான். அதேபோல் நாத்திகனும் கடவுள் சோதிக்கிறாரோ என்று சந்தேகப்படுகிறான். எனவே, இந்த உலகில் முழு நாத்திகனும் இல்லை, முழு ஆத்திகனும் இல்லை.