கேள்வி : ரோல் மாடலாக ஒருவரை நம் வாழ்வில் பின்பற்றலாமா..? – ஏ.மாரிக்கனி, சென்னை.
ஞானகுரு :
மகாத்மா காந்தி சிறுவனாக இருந்த காலத்தில் அரிச்சந்திர மகாராஜாவின் கதையைக் கேட்டு உண்மையை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்துக்கொண்டார். தென்னாப்பிரிக்கா சென்ற நேரத்தில் லியோ டால்ஸ்டாயின் புத்தகங்களைப் படித்து அமைதிவழிப் போராட்டம் பற்றி தெளிவாக அறிந்துகொண்டார். அரிச்சந்திரனும் லியோ டால்ஸ்டாயும்தான் காந்தியின் மனதில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள்.
ஆனாலும் இருவரையும் அப்படியே தன்னுடைய வாழ்க்கையில் காந்தி பின்பற்றவில்லை. இருவரது கருத்துக்களையும் ஒன்றிணைத்து அமைதிவழிப் போராட்டம் என்பதை உண்மை வழிப் போராட்டம் என்று புதிய அஹிம்சை போராட்டத்தை உருவாக்கினார். அமைதியைவிட உண்மையை அதிகம் நம்பினார் காந்தி. உண்மையே ஆயுதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். உண்மையுடன் இருப்பவர்களுக்கு ஆயுதம் அவசியமில்லை என்றுதான் சத்தியாகிரக போராட்டத்தை வடிவமைத்தார். தனக்கென்று ஒரு புதிய வழியை உருவாக்கியதாலே இன்று மகாத்மாவாக கொண்டாடப்படுகிறார்.
எனவே, எத்தனை பேரை வேண்டுமானாலும் மனிதர்கள் ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், யாரையும் பின்பற்றத் தேவையில்லை. ரோல்மாடல்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பண்புகளை மட்டும் பெற்றுக்கொள்வதே போதும். அதுவே, தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது.