கேள்வி : எம்.ஜி.ஆரைப் போன்று விஜய்யால் அரசியலில் வெற்றி பெற முடியுமா..? – ராஜா விஜய், அம்பத்தூர்.
ஞானகுரு :
எம்.ஜி.ஆர். ஒரு சாதாரண திரைப்பட நடிகர் மட்டுமல்ல. தன் படத்தில் மது, சிகரெட் போன்ற கெட்ட விஷயங்கள் இடம்பெறக் கூடாது என்று நினைத்த மனிதாபிமானி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தி.மு.க.வுக்காக தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்த களப்பணியாளர். அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சொந்த நிதியில் உதவிகள் செய்த மனிதநேயர், நாடக மன்றம், நடிகர் சங்கம், சிறு சேமிப்புக்குழு தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பொருளாளர் என பல்வேறு பதவிகள் வகித்து அதிகாரத்தின் அமைப்பு அறிந்த அரசியல்வாதி.
இவை எல்லாவற்றையும் விட எந்தக் கட்சிக்காக கடுமையாக உழைத்தாரோ, அந்த கட்சியிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டவர். எனவே, கட்சி தொடங்கவேண்டிய தேவையும் அவசியமும் உருவானது. கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர். பக்கம் நியாயம் இருந்ததால் மக்கள் அவருக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தனர். அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து போனாலும், அவர் ஆட்சியில் இருந்த வரை ஒரு சொத்து கூட வாங்காமல் நேர்மையாக இருந்தார். அதனாலே தொடர்ந்து ஜெயித்தார்.
இப்போது விஜய் என்ன காரணத்துக்காக அரசியலுக்கு வருகிறார்..? இதுவரை அவரது சொந்தப் பணத்தில் மக்களுக்கு என்ன உதவிகள் செய்திருக்கிறார்..? ஆளும் தி.மு.க.வை விட இவர் எந்த விதத்தில் புதிய ஆட்சியைத் தரப் போகிறார் என்பதற்கெல்லாம் விஜய்யிடமும் அவரை ஆட்டுவிக்கும் மேலிடத்திடமும் விடை இருக்கிறதா..?