பிரபலங்கள்

யார் இந்த ஆயி என்ற பூரணம்..?

தர்ம தேவதை

தர்ம தேவதை என்ற விருது பெற்று மீண்டும் ஒரு முறை தலைப்புச் செய்திக்கு வந்திருக்கிறார் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவரை அறியாதவர்களுக்காக ஒரு சிறிய மீள் பார்வை.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

இந்த சூழலில் பூரணம் அம்மாள் அவர்கள் செய்த நில கொடை ஒருபுறம் எனில். அதைவிட அவர் இருபது வருடங்களுக்கு முன்பே உறவினர் ஒருவருக்கு தன் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியவரும் ஆவார். ஆகவே, கல்விக்கு நிலம் வழங்கிய பூர்ணம் அம்மாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெகுவாக பாராட்டினார்.

மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் இவரது செயலைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலின்,  “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்’’ என்று பாராட்டி முதலமைச்சர் சிறப்பு விருதை குடியரசுத் தினத்தில் வழங்கினார். அவருக்கு இப்போது விகடன் மூலம் தர்ம தேவதை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *