பணத்துக்கும் இதயம் உண்டு
ரத்தன் டாட்டா எனும் இமயம்
எப்படியாவது தங்கள் மீது புகழ் வெளிச்சம் விழுந்துவிடாதா என்ற ஆசையில் தான் பெரும்பாலான மனிதர்கள் முண்டியடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். புகழுக்காக எதுவும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தில் வித்தியாசமானவர் ரத்தன் டாட்டா. எந்த வகையிலும் தன் மீது புகழ் வெளிச்சம் விழுந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டவர்.
பத்மபூஷன், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.
பணம் படைத்த எளிய மனிதர் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் முதல் நபராக ரத்தன் டாட்டா இருப்பார் என்பது சர்வ நிச்சயம். தனி மனித சுதந்திரம், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். தான் மட்டுமின்றி தன் நிறுவன ஊழியர்கள் நலனில் நேரடியாக அக்கறை காட்டியவர். வெற்றிகரமான நிர்வாகி என்றாலும் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதற்காக கட்டாயக் கல்யாணம் செய்துகொள்ளாதவர்.
விவாகரத்து செய்துகொள்வது பணக்காரக் குடும்பங்களில் சகஜம் என்றாலும், அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ரத்தன் டாட்டா. காதல் கை கூடாத நிலையில், அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையை நாடியதற்கு பெற்றோரின் விவாகரத்து ஒரு முக்கிய காரணம்.
கோடி கோடியாகப் பணம் இருந்தாலும், அதனை அவர் தன்னுடைய வியாபாரமாக மட்டுமே பார்த்தாரே தவிர, தன்னுடைய அந்தஸ்தாகக் கருதவில்லை. ரத்தன் டாட்டாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3,800 கோடி ரூபாய் என்றாலும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 400க்குப் பின்னே இருந்தார். காரணம் என்னவென்றால், இவரது வருமானத்தில் 66% தொண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
மும்பையின் கும்ப்லா ஹில்ஸில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகையான ஆன்டிலாவின் பளபளப்புக்கு நேர்மாறாக, அதே மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கிறது ரத்தன் டாட்டாவின் நேர்த்தியான மூன்று மாடி பங்களா. உதவியாளர்கள் வைத்துக்கொள்ளாத கோடீஸ்வரர்.
எளிய மனிதர் என்றாலும் சாகசக்காரர். அதனாலே விமானம் ஓட்டுவதற்கு உரிமம் வைத்திருந்தார். எஃப்16 ரக விமானம் ஓட்டிய முதல் இந்தியர் ரத்தன் டாட்டா. இந்தியா முழுக்க இவருக்கு ஹோட்டல்கள் இருக்கிறது என்றாலும் ஆடம்பர ஹோட்டல்களை விரும்புவதில்லை. அவரது ஹோட்டலில் சாப்பிட்டாலும் சரியாக எண்ணிப் பார்த்து பில் செட்டில் செய்துவிடுவார்.
டாட்டாவின் பொருளை பயன்படுத்தாமல் எந்த ஒரு மனிதரும் இந்தியாவில் இருக்கவே முடியாது. உப்பு தொடங்கி, இணையம் வரை எல்லா தொழிலும் அத்துப்படி என்றாலும் கார்களின் காதலன். அதனால், இந்தியாவில் சொந்தமாகக் காரைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதுசாத்தியமில்லை என்றே அத்தனை நண்பர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் சொன்னார்கள். ஆனால், விடாபிடியாக இன்டிகோ காரை உருவாக்கிக் காட்டினார்.
நடுத்தர மக்களும் கார் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் 1 லட்சம் ரூபாய்க்கு நானோ கார் உருவாக்கிக் காட்டினார். அதன் அடக்கவிலை அதிகம் வந்தது என்றாலும் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த காரை தோல்வி அடையச் செய்தார்கள். நானோ கார் வைத்திருப்பது அந்தஸ்தைக் குறிக்கவில்லை என்பதாலே இதனை வாங்குவதற்கு விரும்பாமல் ஆடம்பரக் கார் வாங்கினார்கள்.
இந்தியாவில் அம்பானி, அதானி போன்றோர் எத்தனையோ அரசு துறைகளில் நுழைந்து துவம்சம் செய்த நேரத்திலும் வேடிக்கை பார்த்தாரே தவிர, போட்டி போடவில்லை. அமைதியாகக் காத்திருந்தார். அந்த பொறுமையே அவருக்கு விரும்பிய ஏர் இந்தியாவை பெற்றுத் தந்தது. அவர் ஓய்வுக்குப் பிறகு ஒளிவட்டம் விழும் அளவுக்கு எங்கேயும் போய் உரை நிகழ்த்தவில்லை. தான் சாதனை செய்ததாக பெருமைபட்டுக் கொள்ளவில்லை. அதேநேரம், குறைந்த விலையில் புற்றுநோய் சிகிச்சை, கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு டாட்டா அறக்கட்டளையைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
1991இல் ஜேஆர்டி டாட்டாவிடம் இருந்து அவர் கரங்களுக்கு நிறுவனம் வந்த பிறகு ஒட்டுமொத்த குழுமத்தின் தோற்றத்தையும் கட்டுமானத்தையுமே மறுசீரமைக்கத் தொடங்கினார் ரத்தன் டாட்டா. இந்தியாவில் மட்டுமல்ல, 100 நாடுகளில் டாட்டா தடம் பதித்திருக்கிறது. சென்ற இடமெல்லாம் சந்தையை கைப்பற்றி இருக்கிறது.
டாட்டாவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்வு தரும் வெற்றி. ஏனென்றால் இந்தியா முழுக்க கோடிகளை கொட்டி ஏழை மக்களின் கல்விக்கும், அவர்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உதவிக்கொண்டே இருந்தார். கோவிட் உலகை தாக்கிய போது அதற்காக 500 கோடிகளை கொடையாக அளித்தார். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டபோது அதில் உயிரிழந்தோருக்கு ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கச்செய்தார்.
ரத்தன் டாட்டாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபோது அவருக்கு 10 வயதுதான். ரத்தனுக்கு 18 வயதாக இருந்தபோது, அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிட்சர்லாந்து பெண்ணை மணந்தார். மறுபுறம், அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்செட்ஜி ஜீஜீபாய் என்பவரை மணந்தார். ரத்தனை அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாதான் வளர்த்தார்.
ரத்தன் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நல்ல வேலை, ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. தனது பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. தன்னுடைய காதலியும் உடன் வருவார் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. இந்தியா சீனா போரை காரணம் காட்டி வர மறுத்தார். அதற்குப் பிறகு ரத்தன் டாட்டா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
1962ம் ஆண்டு ரத்தன் டாட்டா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் ஒரு கடைநிலை தொழிலாளியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் பிறகு திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.நானாவதியின் சிறப்பு உதவியாளர் ஆனார். இதற்குப் பிறகு, ரத்தன் டாடா ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு பணியாற்றினார். நஷ்டத்தில் இயங்கும் சென்ட்ரல் இந்தியா மில் மற்றும் நெல்கோ நிறுவனங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஜே.ஆர்.டி., அவருக்கு வழங்கினார். ரத்தனின் தலைமையின்கீழ், மூன்று ஆண்டுகளுக்குள், நெல்கோ நிறுவனம் மாற்றமடைந்து, லாபம் ஈட்டத் தொடங்கியது.
ஜே.ஆர்.டி. 75 வயதை எட்டியபோது, அவரது வாரிசு யார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. நானி பல்கிவாலா, ருஸ்ஸி மோதி, ஷாருக் சப்வாலா, எச்.என்.சேத்னா ஆகியோரில் ஒருவரைத்தான் ஜே.ஆர்.டி தனது வாரிசாகக் கருதினார். பல்கிவாலா மற்றும் ருஸ்ஸி மோதி, ஆகிய இருவர்தான் அந்தப் பதவிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரத்தன் டாட்டாவும் நம்பினார். ஆனால், பதவி ரத்தன் டாட்டாவுக்கு வந்தது. பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்தவர்/ பின்னர் டாட்டா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருந்த ரத்தன் டாட்டா எழுதியிருக்கும் உயில் அவரது மனிதநேயத்தைக் காட்டுவதாகவும் வேலைக்காரர்கள், நாய்க்கும் உரிய மரியாதை செலுத்துபவர் என்பதையும் சொல்லிக்கொடுத்திருக்கிறது.
‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க்’ என தனது சக்சஸ் மந்திரம் என அவரே சொல்லியிருக்கிறார்.
அவரது மேலும் சில சக்சஸ் மந்திரங்கள் இதோ…
- புதுமை என்பது போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி.
- வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடங்கள். ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் சேர்ந்து நடக்க வேண்டும்.
- நம் இலக்கு மிகவும் எளிமையானது: நாம் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருப்பது
- வியாபாரத்தில், நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்குகிறீர்கள்
- முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது.
- சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்.
- சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை… நான் முடிவை எடுத்த பின்பு அதை சரியானதாக்குவேன்
- நிறுவனத்தின் நலனை கடந்து, சமூகத்தின் பயன் சார்ந்து வணிகம் இருக்க வேண்டும்.
- வெற்றி பெறுவதற்கு ஒரே வழி தோல்வியை கண்டு அஞ்சாமல் இருப்பது தான்.