பிரபலங்கள்

கோபத்தில் யார் அழகு..? மரணத்தில் யார் அழகு..?

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இளைய சமுதாயத்திற்கு வழி காட்டும் பணியில் இன்றும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் அவரது, ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ புத்தகத்தில் இருந்து சிறு பகுதி மட்டும் இங்கு. படித்துப் பாருங்கள், பிடித்துப் போகும்.

1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?

 நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!

2. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?

கோபம் வருகிறபோது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்

3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?

உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம்.

4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?

தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!

5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?

இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை…

6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

மௌனத்தை…

7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?

அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?

நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு. ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது. உடனே பன்றி, ‘இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே!‘ என்று பரிகசித்தது. அதற்கு யானை, ‘நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்!’ என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.

10. சோம்பலின் உச்சம் எது?

கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!

12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?

பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?

தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.

14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?

கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.

15. எது அழகு?

செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!

16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?

பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

 17. எந்தப் பஞ்சம் கொடியது?

இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

18. யாருடைய மரணம் அழகு?

இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!

19. எப்போது தவறுகள் மறைகின்றன?

அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!

20. எது சிறந்த உதவி?

செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!

One thought on “கோபத்தில் யார் அழகு..? மரணத்தில் யார் அழகு..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *