கலாம் என்றால் நம்பிக்கை..!
83 வயது குழந்தையின் பொன்மொழிகள்
ஒரு சில மனிதர்கள் வாழ்க்கையைப் படிக்கவே வேண்டாம், பார்த்தாலே போதும். அது மிகப்பெரும் எழுச்சியும் நம்பிக்கையும் தருவதாக இருக்கும். அப்படியொரு அதிசயத் தலைவர் அப்துல் கலாம். தன்னை ஒரு சாதனையாளராக ஒருபோதும் அவர் கருதியதே இல்லை. அவரது நம்பிக்கை வார்த்தைகள் பார்ப்பதற்கு முன் அவரது வாழ்க்கையை கொஞ்சம் தொட்டுப் பார்க்கலாம்.
ராமேசுவரத்தில் சிறு படகு உரிமையாளரின் மகனாய் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்த கலாமின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். அவருடன் பிறந்த சகோதர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக் குட்டியான கலாம் பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று செய்தி தாள் விநியோகித்ததை தன் வாழ்நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
பள்ளிப் படிப்பினை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இளநிலை இயற்பியலும், சென்னை எம்.ஐ.டியில் விமானப் பொறியியலும் பயின்ற அப்துல் கலாம், 1958-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.250 பின்னர் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.
திருமணம், குடும்பம் போன்ற வழக்கமான வாழ்க்கையை விரும்பாமல் தன்னுடைய வேலையைக் காதல் செய்தார். எல்லா நேரமும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருந்தார். எனவே 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பு தேடிவந்தது. அதே ஆண்டு, ரோகிணி செயற்கைக் கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய ஐந்து ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் வெற்றி பெற்றன. இந்த ஏவுகணைகளுக்கு ஐந்து இயற்கை மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய பெயர்களை தேர்ந்தெடுத்து கலாம் வைத்தார். இதனால் ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என பாராட்டப்பட்டார்.
1998-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி மதியம் 3.45 மணி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அப்துல் கலாமின் தலைமையில் அமெரிக்காவின் செயற்கைக் கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் அப்போது நம் இந்தியா மீது திரும்பியது. இந்த வெற்றி அவருக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது. ஜூலை 25, 2002 அன்று இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி ஏர்ற்றார்.
வழக்கமான குடியரசுத் தலைவராக செயல்படாமல் மக்களூக்கும் மாணாவர்கள் நலன் காக்கும் தலைவராக இருந்தார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும், பதவி முடிந்த பின்னரும் அப்துல் கலாம் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மாணவர்களையெல்லாம் கனவு காணுங்கள் என இளைய தலைமுறைக்கு வழி காட்டினார்.
அப்துல் கலாமின் வார்த்தைகள் தனி மனிதர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் நாட்டுக்கான வார்த்தைகளாக இருந்திருக்கிறது.
- நீங்கள் வெற்றி பெற்றவர்களின் சரித்திரங்களைப் படிக்காதீர்கள். அதிலிருந்து வெறும் தகவல்களைத் தான் பெற முடியும். தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள் அதிலிருந்து தான் வெற்றிக்கான வழி கிடைக்கும்.
- கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுங்கள் கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கின்றனர்.
- வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!
- நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை.
- அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
- கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்.
- ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம்.
- துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை!
- கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை. நிச்சயம் எதுவும் இல்லை.
- நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.
- கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அது தான் கனவு.
- வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.
- உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.
- சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன.
- நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை!
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- தனது இலக்கை குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளி தான்.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலி தான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான்.
- உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
- ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் இல்லை; உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான்.