விஜய் சொல்லிக் கொடுத்த முக்கால் வயிறு ரகசியம்
இயக்குநர் பேரரசு.
விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வணிக ரீதியான பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பேரரசு. ஊர்களின் பெயர்களைத் தலைப்பாக வைப்பது இவரது அடையாளம். ஆரோக்கியம் சார்ந்த தனது எண்ணங்களை வாசகர்களுக்குப் பகிர்கிறார் பேரரசு.
“திரையுலகம் என்பது பணமும் புகழும் வசதிகளும் உள்ள துறை என்றாலும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்பதால் உணவுக் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் சிரமம். அந்த அளவுக்கு ஏராளமாக உண்பதற்கும், மது வகைகள் புழங்குவதற்கும் வாய்ப்புள்ள துறை இது. எனவே, கொஞ்சம் பலவீனமாக இருந்தால் திசை மாறிப் போய்விடுவோம்.
ஆரம்பத்தில் தங்களது உடலை மிகவும் சிரமப்பட்டுக் காப்பாற்றிக் கொள்ளும் நட்சத்திரங்கள் பரபரப்பாக மாறும் நேரத்தில், கட்டுப்பாட்டைக் கைவிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதுண்டு. கலைஞர்களுக்கு உடல் தான் மூலதனம் என்பதை மறந்து மார்க்கெட் இழந்தவர்கள் உண்டு.
என்னைப் பொறுத்தவரை உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன். வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தாலும் எனது உணவு விஷயத்தில் கவனமாக இருப்பேன். என் உடல். விரும்பியதை மட்டுமே சாப்பிடுவேன். அதற்கு மாறாக எவ்வளவு கொடுத்தாலும் எடுத்துக்கொள்ள மாட்டேன்.
ருசியாக உள்ளது என்பதற்காக நாக்குக்குப் பிடித்ததெல்லாம் சாப்பிட்டால் உடல் பருமனாகிவிடும். எடை கூடி விட்டால் சரியாகச் செயல்பட முடியாமல் சோர்வு வந்துவிடும். ஓடியாடி வேலை செய்ய முடியாமல் சலிப்பு வந்து விடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன்.
காலையில் முக்கால் மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நடைப் பயிற்சி செய்வேன். நடைப்பயிற்சிக்கு முன்பு அரை லிட்டர் தண்ணீர் குடிப்பேன். எனக்கு காபி, பூஸ்ட், போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற பானங்கள் பிடிக்காது. எனவே நடந்து முடிந்த பிறகு டீ குடிப்பேன். .4 மிளகு, 3 கிராம்பு, ஒரு ஏலக்காய் ,கொஞ்சம் இஞ்சி, பால் கலந்து மசாலா டீ குடிப்பேன். அதன் பிறகு யோகா செய்வேன். எளிமையான ஆசனங்கள் என்றாலும், உடலின் எல்லா உறுப்புகளும் அசையும்படி பயிற்சிகள் இருக்கும்.
படப்பிடிப்புத் தளங்களில் காலையில் இட்லி, தோசை, பூரி, வடை, பொங்கல், வடைகறி, சட்னி, சாம்பார் என்று ஏராளமான உணவு வகைகள் இருக்கும். ஆனால் நான் காலையில் கோதுமை உப்புமா தான் சாப்பிடுவேன். கறிவேப்பிலைத் துவையல், அவித்த முட்டை அல்லது வரகு புட்டு உண்பதுண்டு.
மதியம் சாதம், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காய்கறிகள், பொரியல், கூட்டு, சாம்பார், ரசம், புளிக் குழம்பு, வற்றல் குழம்பு, தயிர், மோர் என்று ஏராளமான உணவு இருந்தாலும் நான் மிகவும் கட்டுப்பாடோடு சாப்பிடுவேன். எனக்கு மிகவும் பிடித்தது காரக்குழம்பு. அத்துடன் பீட்ரூட், புடலங்காய், வெண்டைக்காய், கத்தரி போன்ற காய்கறிகள் எடுத்துக் கொள்வேன். அதில் பொரியல், கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆம்லெட் எப்போதாவது உண்டு .
மட்டன் சாப்பிட மாட்டேன். ஆனால் தலைக்கறி பிடிக்கும். கறி என்றால் கோழிக்கறி தான். அதுவும் நாட்டுக் கோழிக்கறி தான் சாப்பிடுவேன். கடல் உணவுகளில் மீன், நண்டு பிடிக்கும். இறால் பிடிக்காது. காய்கறிகளில் முட்டைகோஸ், காலிபிளவர் பிடிக்காது.
இரவில் கோதுமை தோசை, பழங்கள் எடுத்துக் கொள்வேன். சாப்பிடும் முன்பும் பின்பும் அரை மணி நேரத்திற்கு நீர் குடிக்க மாட்டேன். அது ஜீரண சக்தியைக் குறைந்து விடும். இரவு உணவு சாப்பிட்ட பின் மூன்று மணி நேரம் கழித்து தான் தூங்குவேன்.
வெளியூர் ஹோட்டல்களில் தங்கும்போது கடினமான உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். இட்லி, பிரட், கான்ப்ளக்ஸ் பால், பிரட் ஆம்லெட் போன்ற எளிய உணவுகள் தான் சாப்பிடுவேன். பஃபே விருந்துகளில் கலந்துகொள்ள மாட்டேன். அதில் நுழைந்தால் எல்லை தாண்டி விடுவோம்.
மூக்கு முட்டும் அளவுக்குச் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது. சிலர் பிரியாணி மீது உயிராக இருப்பார்கள். எனக்கு பிரியாணி மீது மோகம் இல்லை என்பதால் அதை இரவு நேரத்தில் தொடவே மாட்டேன். மட்டனும் பிடிக்காது என்றாலும் விருந்தாளியாகச் செல்லும் போது சில இடங்களில் வற்புறுத்துவார்கள். அப்போது கொஞ்சமாக எடுத்துக் கொள்வேன்.
பாரம்பரிய உணவாக அம்மா சமைக்கும் நெய் கத்தரிக்காய் அவ்வளவு அற்புதமாக இருக்கும் .சின்ன சின்ன வெங்காயங்களை வெட்டிப் போட்டுக் கத்திரிக்காயை நெய்யில் வறுத்துக் கொடுப்பார். அவர் செய்யும் மண்டி என்கிற குழம்பும் மிகவும் பிடிக்கும். செட்டிநாட்டில் அது மிகவும் புகழ் பெற்றது. சின்ன வெங்காயம், வெண்டைக்காய் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் போட்டு மிளகாய்த் தூள் போடாமல் செய்வார்கள். புளி சற்றுத் தூக்கலாக இருக்கும். அம்மா வைக்கும் மீன் குழம்பு அவ்வளவு அருமையாக இருக்கும். புடலங்காய் பொரியல் மிக அற்புதமாகச் செய்வார்.
நம் வேலைகளை நாமே செய்வது கூட உடற்பயிற்சி போலத்தான். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைச் செய்தாலே போதும் வேறு உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனால் என் எளிய வேலைகளை நானே செய்வேன். இருந்த இடத்திலிருந்து எழாமல் யாரிடமும் வேலை வாங்குவதில்லை.
உடல் நலனில் மனதிற்கும் இடம் உண்டு. கவலைகளுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது. எதையும் பெரிதுபடுத்தக் கூடாது. மனசு சோர்ந்தால் உடல் நலனும் கெட்டுவிடும். நிறைய பேர் சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள். மனதைக் கவலையில் ஆழ்த்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். சுறுசுறுப்பு போய்விடும் .செயல்பாடுகள் மங்கி விடும்.
கவலையில் விழுந்தவர்கள் உடலைக் கவனிக்க மாட்டார்கள், உடற்பயிற்சி செய்ய மாட்டார்கள். நடை தளர்ந்து விடும் தூக்கத்தைக் குறைத்து நோயில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே இதில் நான் கவனமாக இருப்பேன்.
சினிமாவில் நல்லது கெட்டது எல்லாமே கிடைக்கும். சாப்பாடு மட்டுமல்ல தீய பழக்கங்களும் கூடா நட்புகளும் தேடி வரும். விழிப்பாக கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். சிறிய பலவீனத்தால் வீழ்ச்சி அடைந்தவர்கள் நிறைய பேர்.
எனவே, எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்; நல்லதையே நினைக்க வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடாது. பாராட்டுகிற குணம் வேண்டும்.
படப்பிடிப்பு ,சினிமா வேலைகள் இல்லாத நாட்களில் புதிய படங்கள் – குறிப்பாகச் சிறிய தயாரிப்பாளர்களின் பட விழாக்களுக்குச் செல்வேன். அவர்களின் ஆடியோ வெளியீட்டுக்குச் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வருவேன். பேரரசுக்கு வேறு வேலை இல்லையா? என்று சிலர் விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், நான் அவர்களையும், விமர்சனத்தையும் கண்டுகொள்வதில்லை.
ஏனென்றால் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு நாம் போய்த் தான் ஆக வேண்டும் என்பதில்லை. அவர்களின் விழாக்களுக்குக் கூப்பிட்டாலும் கூப்பிடாமலும் பல பேர் வருவார்கள். ஆனால் இந்தச் சிறிய முதலீட்டுப் படங்களை யார் கவனிப்பார்கள்? அவர்களை ஊக்கப்படுத்துவதும் வாழ்த்துவதும் எனது கடமை என்று நினைக்கிறேன். சினிமா எனக்குப் புகழையும் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறது. அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? அந்த நன்றிக் கடனுக்காகச் சென்று அவர்களை வாழ்த்துவேன்.
என்னையும் ஒரு விருந்தினராக அழைக்கும் அளவிற்கு இறைவன் வைத்திருக்கிறான் என்று மகிழ்ச்சியோடு செல்வேன். அவர்களை வாழ்த்தும்போது மனம் நிறைகிறது, ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது, அவர்களும் மகிழ்கிறார்கள். ஒரு நல்லெண்ணம் அங்கே பரவுகிறது. இதனால் எனக்கு இழப்பு ஒன்றும் இல்லை. மனதிருப்தி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி விழாக்களில் பலரையும் பார்க்க முடிகிறது. புதிய புதிய ஆட்களைச் சந்திக்கவும் பேசவும் முடிகிறது என்பதால் என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன். ஒரு வகையில் அது என் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது..
எப்போதும் நான் முக்கால் வயிறு தான் சாப்பிடுவேன். வயிறு முட்ட வயிறு நிரம்ப சாப்பிடுவது கிடையாது. இதற்கு நடிகர் விஜய் சார் ஒரு காரணம். எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்வார் .அவர் இவ்வளவு ஆண்டு காலமாக உடம்பை அதே மாதிரி வைத்துக் கொண்டுள்ளார். உடல் மெலிவாரே தவிர எடை கூடுவதில்லை.
குறிப்பாக திருமலை, பகவதி, அழகிய தமிழ் மகன் சமயத்தில் உடம்பை மிகவும் ஒல்லியாக வைத்திருந்தார். உடலைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு.உணவுக் கட்டுப்பாட்டைச் சரியாகப் பராமரிப்பார். அளவோடுதான் சாப்பிடுவார். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கும்.
அது போல் தான் ரஜினி சார். இந்த வயதிலும் எந்த வேடம் போட்டாலும் அவருக்குப் பொருந்துகிறது. இந்த வயதிலும் மேக்கப் போட்டால் அவரை 40 வயது மனிதராகப் பார்க்க முடிகிறது என்றால் அவரது உடல் நலக் கட்டுப்பாடுதான் காரணம். அவரும் சாப்பாட்டு விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பார்.
எனக்கு சித்த மருத்துவத்தின் மீது மரியாதை உண்டு. எனது அப்பா நாட்டு வைத்தியம் செய்பவர். பாம்புக் கடிக்கு வேப்பிலையால் குழை அடித்து மந்திரத்தை ஜெபித்து சரிப்படுத்தி விடுவார். இதை இப்போது சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். பாம்பு கடித்து அலறி அடித்துக்கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு கூட வருவார்கள். சிறிது நேரத்தில் அப்பா அவர்களைக் குணப்படுத்தியதும், சிரித்துக் கொண்டே செல்வார்கள். அந்த அதிசயத்தை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம்.
அதேபோல் பச்சிலைகளை வைத்து சிறுநீரகக் கல்லைக் கரைத்து விடுவார். புரையோடிய புண்களுக்கு சீனி அவரை இலைகள், உப்பு, மஞ்சள் வைத்து ஒரு மருந்து கட்டி சரி செய்வார். அப்பாவுக்கு இப்போது 85 வயதாகிறது. செயல்பாடுகள் குறைந்துவிட்டன.
பொதுவாக நான் எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் செல்வதில்லை. சிறு சிறு வைத்தியங்கள் பார்த்து என்னை நானே சரிப்படுத்திக் கொள்வேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் டாக்டரிடம் செல்வேன். ரசாயனங்கள் கொண்ட ஷாம்பூ போட மாட்டேன். செம்பருத்தி இலைகளை மிக்ஸியில் போட்டு அடித்து ஷாம்பூவாக பயன்படுத்திக் கொள்வேன். இதில் நன்கு நுரை வரும். தலைக்கும் ஆரோக்கியம். கண்களுக்கும் குளிர்ச்சி. வெளியூரில் இருந்தால் ஜான்சன் பேபி ஷாம்பூ போட்டுக் குளிப்பேன்.
திருப்பாச்சி சமயத்தில் எனக்கு சிறுநீரகத்தில் கல் இருந்தது லேசர் வைத்து உடைக்க வேண்டுமென்றார்கள். ஆபரேஷனுக்கு தேதி கொடுத்தாகிவிட்டது. அந்த நேரத்தில், எம்ஜிஆர் நகரில் ஒரு நாட்டு வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு நான்கே நாளில் வலி குறைந்தது, கல்லும் கரைந்து விட்டது.
ஆரோக்கியத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. நம் உடலுக்கு நல்லது செய்தால் உடல் நமக்கு நன்மை தரும். வாழ்க்கையில் நமக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நமது உடலையும் சற்று அக்கறைடன் கவனித்தால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
– அருள்செல்வன்