பிரபலங்கள்

தீபிகாவின் தாய்மைக் கொண்டாட்டம்

உடலை காதல் செய்

தாய்மை அனுபவத்தை அனைத்துப் பெண்களுமே விரும்புகிறார்கள். தங்கள் வயிறுக்குள் ஓர் உயிர் உருவாவதையும், அது வளர்ந்து பெரிதாவதையும் ஒவ்வொரு நாளும் ரசித்து சுமக்கும் அனுபவம் பெண்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் அற்புத வரம். இதை ஒவ்வொரு பெண்ணும் எப்படி கொண்டாட வேண்டும் என்று வாழ்ந்தே காட்டியிருக்கிறார் நடிகை தீபிகா படுகோன்.

தீபிகா படுகோனுக்கு அறிமுகம் தேவையில்லை. 2023 வரை இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழ்ந்தவர் தீபிகா. மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார். நாட்டின் மிகவும் பிரபலமான ஆளுமைகளின் பட்டியல்களில் இடம் பெற்றவர். டைம் இதழ் அவரை 2018ல் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது. அதேபோல் 2022ல் டைம் விருது பெற்றுள்ளார்.

நடிகையாக இருந்த நேரத்தில் உடம்பை ஃபிட் ஆக வைத்திருப்பதற்காக அவ்வப்போது உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார். விதவிதமான கேரக்டர்களில் நடித்தார். சினிமாவை எப்படி காதலித்தாரோ அதே அளவுக்கு ரன்வீர் சிங்கையும் காதலித்தார். அந்த காதல் அனுபவத்தையும் மிகவும் ரசித்துக் கொண்டாடினார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் காதலில் இருந்த தீபிகா 2018ம் ஆண்டு அதாவது தன்னுடைய 38ம் வயதில் ரன்வீரை திருமணம் செய்துகொண்டார். காதல் போலவே தாம்பத்திய வாழ்க்கையையும் ரசித்து வாழ்ந்தார்.

கடந்த ஜனவரி மாதம் தீபிகா பெற்றோர் ஆவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர், “ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளை எதிர்நோக்குகிறோம். அவர் தனது வளர்ப்பைப் பற்றியும் தெரிவித்தார், புகழ் மற்றும் பணம் இருந்தபோதிலும் அடித்தளமாக இருக்க வேண்டிய அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தத் தொழிலில், புகழ் மற்றும் பணத்தால் எடுத்துச் செல்லப்படுவது எளிது. ஆனால் வீட்டில் என்னை யாரும் பிரபலமாக நடத்துவதில்லை. முதலில் நான் ஒரு மகள், ஒரு சகோதரி. அது மாறுவதை நான் விரும்பவில்லை. என் குடும்பம் என்னை அடித்தளமாக வைத்திருக்கிறது, ரன்வீரும் நானும் எங்கள் குழந்தைகளிடமும் அதே மதிப்புகளை வளர்ப்போம் என்று நம்புகிறோம்” என்றார்.

அவர் ஆசை அடுத்த மாதமே நிஜமானது. பிப்ரவரி 29 அன்று இன்ஸ்டாகிராமில் தீபிகா தனது கர்ப்பத்தை அறிவித்தார். அப்போதே செப்டம்பர் மாதம் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதை தம்பதியர் வெளிப்படையாக அறிவித்தனர். அது மட்டுமின்றி தொடர்ச்சியாக தன்னுடைய கர்ப்பகால பயணத்தை தீபிகா சோஷியல் மீடியாவில் பதிவு செய்துவந்தார். அவர் கர்ப்பம் அடைந்த மூன்றாவது மாதம் யோகாசனம் செய்து ஒரு போஸ்டை ஷேர் செய்தார்.

அந்த ஆசனம் குறித்து தீபிகா, ‘’தினமும் தூங்குவதற்கு முன் விப்ரித் கர்னி ஆசனம் செய்தால், அது உடல் மற்றும் மனதைத் தளர்த்துவதற்கு உதவியாக இருக்கும், இதன் விளைவாக நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த ஆசனம் கால் மற்றும் பாதங்களில் வலியை போக்கவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும், கால்கள், பாதங்கள் மற்றும் இடுப்புகளில் இருந்து அழுத்தம் அல்லது சோர்வைப் போக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறுகிறார்.. தினமும் இதை செய்தால், அது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், கீழ் முதுகுவலியைக் குறைக்கவும் உதவும் என்கிறார்.. மேலும் இந்த யோகா ஆசனம் போஸில் இருக்கும்போது உங்கள் சுவாசத்தை மெதுவாகவும் சீராகவும் வைத்திருங்கள், உங்கள் மூச்சை இழுத்து பிடித்துக் கொள்ளக்கூடாது..

மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யாதீர்கள். இந்த போஸைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால், அதை நீங்கள் முயற்சிக்கும் முன், தகுதிவாய்ந்த யோகா ஆசிரியரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது சிறந்தது’’ என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.  

இதையடுத்து நிறை மாதக் கர்ப்பிணியாக தன் கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து போட்டோஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டார் தீபிகா. அந்த புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலாகின. ஏனென்றால், கர்ப்பிணி பெண் என்றால் தன்னுடைய வயிற்றை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, முழு வயிறையும் மகிழ்ச்சியுடன் வெளிக்காட்டி இருந்தார். இதற்காக எழுந்த விமர்சனங்களை எப்போதும் போல் தீபிகா கண்டுகொள்ளவே இல்லை.

தாய்மை புனிதமானது என்பதை விட அது ஆனந்தமயமானது என்று அறிவித்த தீபிகா செப்டம்பர் 9ம் தேதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார்.

விரைவில் தாய்மை அனுபவத்தையும் பகிர்ந்து வழி காட்டுவார் என்றே நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *