சைதை துரைசாமி

அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 143

மாநகரப் பள்ளிகளில் மேயர் சைதை துரைசாமி அவ்வப்போது திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொள்ளும் தகவல் அனைவருக்கும் தெரியவந்தது. எனவே, எந்த நேரமும், எந்தப் பள்ளிக்கும் மேயர் ஆய்வுக்கு வரலாம் என்பதை தலைமை ஆசிரியர்களும், அதிகாரிகளும் உணர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கத் தொடங்கினார்கள்.

மாணவர்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஆரோக்கியமும் முக்கியம் என்பதை சைதை துரைசாமி வலியுறுத்துவது வழக்கம். அப்படி மாணாக்கர்களிடம் பேசிய நேரத்தில், விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு ஆய்வு நடத்துகையில் நிறைய பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானமே இல்லை என்பதும் தெரியவந்தது.

உடனடியாக மைதானங்களைப் பராமரிப்பதற்கு நிலையான வழிகாட்டுதல் வழங்கியதுடன் நில்லாமல், அனைத்துப் பள்ளிக்கும் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிறைய பள்ளியில் போதிய இடம் இல்லை. எனவே பள்ளிக்கு அருகில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மைதானமாகப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டது. விளையாட்டு மைதானமாக எந்த இடத்தைத் தேர்வு செய்யலாம் என்பதில் தலைமை ஆசிரியர் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன்படி நடவடிக்கை மேற்கொண்டார்.

அதேபோன்று பள்ளிக்கு அருகில் இருக்கும் அரசு அல்லது தனியார் பள்ளிகளின் மைதானத்தை, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நடைமுறையையும் கொண்டுவந்தார். ஒருசில தனியார் பள்ளிகள் தயங்கிய நேரத்தில் மேயர் சைதை துரைசாமியே நேரடியாக தனியார் நிர்வாகத்துடன் பேசி, மாநகராட்சி மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அத்தனை பள்ளிகளுக்கும் மைதானம் கிடைத்தது. எந்த காரணத்துக்காகவும் விளையாட்டு வகுப்பை மாணவர்களும் ஆசிரியர்களும் தவிர்க்கக் கூடாது என்ற அறிவுறுத்தலும் சைதை துரைசாமியால் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *