சைதை துரைசாமி

மாநகரப் பள்ளிகளில் சர்ப்ரைஸ் ஆய்வு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 142

மாநகராட்சி பள்ளிகளின் வெளிப்புறத் தோற்றத்தை பொலிவுறச் செய்வதற்கு மேயர் சைதை துரைசாமி எத்தனை முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவுக்கு பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிரம்பியிருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதாவது வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கான சேர், டேபிள் மற்றும் மாணவர்கள் அமரும் பெஞ்ச், கரும்பலகை போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாகவும், எந்த பழுது இல்லாமலும் இருக்கவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.  

பள்ளி வளாகம் குப்பை இல்லாமலும், தண்ணீர் கட்டிக்கொள்ளாமலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இதுபோன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் அல்லது குறை இருக்கும்பட்சத்தில் நேரடியாகவே மேயர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளித் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவு போட்டார்.

அரசு பள்ளிகள் செம்மையாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது ஏதேனும் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்வதை மேயர் சைதை துரைசாமி வழக்கமாக வைத்திருந்தார். பொதுவாக மேயர் பள்ளிக்கு வருகிறார் என்ற தகவல் கொடுத்துவிட்டால், அந்த பள்ளியை எப்படியாவது அலங்காரம் செய்து, குறைகளை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடுவார்கள். எனவே, சைதை துரைசாமி எந்தப் பள்ளிக்குச் செல்வது என்றாலும், முன்கூட்டி தகவல் தெரிவிப்பதில்லை. அவரது உதவியாளர்களிடமும் இன்று விசிட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க மாட்டார்.

ஏதேனும் பணியாக தலைமைச்செயலகம் அல்லது கள ஆய்வுகள் முடித்து திரும்பும்போது, அருகில் இருக்கும் மாநகராட்சிப் பள்ளியில் சட்டென நுழைந்துவிடுவார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் பள்ளியை சுற்றிப் பார்த்து ஆய்வுகள் மேற்கொள்வார். ஏதேனும் ஒரு வகுப்பில் மட்டும் மாணவர், மாணவியர்களிடம் குறைகள் குறித்து கேட்டு அறிந்துகொள்வார். அப்படி மேற்கொண்ட திடீர் ஆய்வில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் சைதை துரைசாமியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *