சர்ச்சை

பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு நியாயமா..?

கல்வித் துறைக்கு நியாயமான கேள்வி

பள்ளியில் ஆசியர்கள் பணியாற்றுவதில் அதிக வித்தியாசம் இருக்கிறது. அதாவது, மாணவர்களை எப்படியாவது அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக வேண்டும் என்று இழுத்துப் பிடித்து வேலை பார்ப்பவர்கள் ஒரு ரகம். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் பேருக்கு பாடத்தை நடத்திவிட்டு ஒப்பேற்றும் ஆசிரியர்கள் ஒரு ரகம். உண்மையில் இப்படி பெஞ்ச் தேய்க்கும் ஆசிரியர்களே அதிகம். கல்வித் துறையில் வேலை செய்பவர்களுக்கும் வேலை செய்யாதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் சம்பள உயர்வு அளிக்கப்படுவது இப்போது கேள்வியாக மாறியிருக்கிறது.

இது குறித்து, ‘’பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்கிரிமென்ட் பதவி உயர்வு எல்லாமே சீனியாரிட்டி படியே கொடுக்கப்படுகிறது. எனவே வேலையே செய்யாத ஆசிரியரும் அந்த பலன்களை எளிதாகப் பெறுவார். வம்பாடுபட்டு வேலை பார்த்து மாணவர்களின் கல்வியை முன்னேற்ற வேண்டும் என்று பரிதவிக்கும் ஆசிரியர்களுக்கும் அதே அளவு தான் கிடைக்கும். இது நாளடைவில் ஒழுங்காக வேலை பார்க்கும் ஆசிரியர்களை மனச்சோர்வு அடைய வைத்து விடும். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் போது நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம் மனிதனாக இருக்கும் யாருக்குமே தோன்றிவிடும்.

எனவேதான் சரியான அப்ரைசல் சிஸ்டம் இங்கே தேவைப்படுகிறது. சில நாட்கள் முன்பு உங்கள் ஊரில் உங்களைத் தேடி என்கிற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் காரியாபட்டி வட்டத்தில் பல துறைகளை ஆய்வு செய்தார். அதில் பலர் பாராட்டு பெற்றார்கள். பலருக்கு சரியாக செயல்பட அறிவுரையும் வழங்கப்பட்டது. அதில் ஒரு கட்டமாக காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தபோது, தமிழ்,கணிதம், இயற்பியல் பாட ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டு பெற்றார்கள். ஆங்கிலம் வேதியியல் ஆசிரியர்கள் சரியாக செயல்படாதது ஆய்வில் தெரியவந்த போது அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்ச்சியை பார்த்தால், அது 94 சதவீதம் வருகிறது. ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50,000 +2 மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் போகிறார்கள் இவற்றில் ஒரு பாடம் இரண்டு பாடத்தில் தேர்ச்சி பெறாததால் தோல்வி அடைபவர்கள் கிட்டத்தட்ட 25,000 பேர். மூன்று பாடங்களுக்கு மேல் தோல்வி அடைபவர்களுக்கு படிப்பில் அக்கறை இல்லை என்று விட்டுவிடலாம். இந்த 25 ஆயிரம் பேரும் மறுதேர்வு எழுதி பட்டதாரி என்னும் நிலைக்கு செல்வது மிக மிக குறைவாகவே இருந்து வருகிறது. ஆசிரியர்கள் அந்தப் பாடங்களை மட்டும் நன்றாக எடுத்து இருந்தால் இந்த 25 ஆயிரம் பத்தாயிரம் ஆக கூட குறைந்திருக்கும். இந்த 25 ஆயிரம் பேரில் பெரும்பாலும் இதற்கு அடுத்த தலைமுறை தான் பட்டதாரி ஆகும் என்னும் நிலையே இருக்கிறது. இப்படி ஒரு சமூக முன்னேற்றத்தையே தடுப்பது ஒரு பாட இரண்டு பாட தோல்வி.

அந்த ஆய்வில் ஆங்கில ஆசிரியர் மற்றும் வேதியியல் ஆசிரியர் எந்தவித முயற்சியுமே எடுக்காதது தெரிய வந்ததால், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கடிந்து கொண்டார். உண்மையில் அந்த ஊர் மக்களின் கருத்தும் அதுதான். எங்கள் பிள்ளைகளுக்கு சரியாக பாடம் எடுக்காமல் நீங்கள் எதற்கு இருக்கிறீர்கள்? இன்னொருவர் அங்கே வந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்குமே என்பதுதான் அங்கே சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஊர் மக்களின் விருப்பமும் ஓரு வகையில் பார்த்தால் இந்த இரு ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்து எல்லா பலன்களையும் பெறுவது, நாளடைவில் புற்றுநோய் போல மெதுவாக பரவி மற்ற ஆசிரியர்களையும் பாதிக்க வல்லது. ஆனால் இந்த ஆசிரியர்களை கண்டிக்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டு உள்ளார்கள்’’ என்கிறார் ஆசிரியர் செல்வம்.

ஆசிரியர் சங்கங்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *