சக்சஸ்

பிள்ளைகளிடம் வாசிப்பு பழக்கம் தூண்டும் வழிகள்

புத்தகம் என்பது மந்திரச்சாவி

இன்று வீடியோ வழி பொழுதுபோக்கே பிள்ளைகளுக்கு பிடித்தமானதாக மாறியிருக்கிறது. பாடப் புத்தகத்தையே வேண்டாவெறுப்பாக அணுகுகிறார்கள். எனவே, கதைப் புத்தகம் அந்நிய வஸ்து போல் மாறிவிட்டது. வீட்டில் பெரியவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதால், பிள்ளைகளை ஊக்குவிப்பதும் கடினமாக இருக்கிறது. ஆனால், புத்தக வாசிப்பு என்பது ஒரு புதிய வாழ்வியல் வழி.

கண், மனம், மூளை ஆகியவை இணைந்து வாசிப்பின் போது மட்டுமே செயலாற்றுகின்றன. ஒவ்வொரு புத்தகமும் புதிய ஒரு வாழ்வை அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, கற்பனைத்திறனை மேம்படுத்துகிறது. இந்த கற்பனைத் திறனே பிள்ளைகளை வெற்றியை நோக்கித் தூண்டுகின்றன. வெற்றிக் கதவைத் தட்டும் மந்திரசாவியே புத்தகங்கள்.  எனவே, பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து செல்வம் எழுதியிருக்கும் பதிவு முக்கியாமானது.

1.. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.

2. அம்மா அல்லது அப்பா , தாத்தா, பாட்டி, ( இருந்தால் )தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.

 3. குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது.

4. புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.

5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.

6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.

7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.

8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.

9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.

10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.

11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.

12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன். 13. பள்ளியில் இருந்த நூலகவகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.

14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.

15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.

16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.

17. கூட்டமாகச் சேர்ந்து குழந்தைகள் கதைப் புத்தகங்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்துங்கள் 18. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.

19. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

இத்தனை நன்மைகள் இருப்பதால் வாசிப்பை ஊக்கப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *