மனம்

யாரும் இல்லாத இடத்தில் கோபம் வருமா..?!

காயம் ஏற்படுத்தும் கலை

‘’சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுகிறார். டீ சூடாக இருந்தாலும் கோபம், ஆறிவிட்டாலும் கோபம். இவரை சமாளிக்கவே முடியவில்லை. நான் என்னதான் செய்வது?’’ ரம்யா ஞானகுருவிடம் சரண் அடைந்தாள்.

‘’நான் சரியாகவே இருக்கிறேன். சின்னச்சின்ன தவறுகள் என்றாலும் கோபம் வருகிறது, அவர்களை திருத்துவதற்காகவே கோப்பப்படுகிறேன். இதில் என்ன தவறு?’’ பிரசன்னாவும் நியாயம் கேட்டான்.

‘’உனக்கு யாரெல்லாம் கோபம் உண்டாக்குகிறார்கள்..?”

‘’என் மனைவி மட்டுமல்ல, குடும்பத்தில் மற்றவர்களும் அலுவலகத்தில் அனைவரும்தான். நான் கோபப்படுவேன் என்று தெரிந்தாலும் யாரும் மாறுவதே இல்லை. இவர்கள்தான் என்னை கோபப்படுத்துகிறார்கள்’’ என்றான் பிரசன்னா.

சிரித்தபடி தொடர்ந்தார் ஞானகுரு. ‘’நன்றாக யோசித்துப் பார். நீ எதிர்பார்க்கும் ஒன்று கிடைக்காதபோது அல்லது நடக்காதபோதுதான் உனக்கு கோபம் வருகிறது. அதாவது, இந்த உலகத்தில் எல்லோருமே, எல்லாமுமே உன் விருப்பப்படி மட்டுமே நடக்கவேண்டும் என்று நினைக்கிறாய். உன்னுடைய கோபம் எதிரே இருப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட காயத்தை உண்டாக்கும் என்பதைப்பற்றி நீ கவலைப்படுவதே இல்லை.

ஆட்களே இல்லாத இடத்தில் நீ கோபமின்றி இருப்பாய் என்று நினைக்கிறாயா..? நிச்சயம் இருக்க மாட்டாய். ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து மனிதர்கள் இல்லையென்றாலும் எதன் மீதேனும் உன் கோபத்தைக் காட்டுவாய். இதெல்லாம் ஏன் தெரியுமா?

உனக்கு கோபத்தை வேறு யாரும் தூண்டுவது இல்லை. உன்னிடம்தான் கோபம் இருக்கிறது. அதைத்தான் நாள்தோறும் எல்லோரிடமும் விதைத்துக்கொண்டே இருக்கிறாய். கோபம் என்பது ஒரு மாயப்பிசாசு. நீ ஒவ்வொரு முறை கோபப்படும் நேரத்திலும் உன்னுடன் மேலும் மேலும் ஒட்டிக்கொள்ளும். பொறுமையும் புன்னகையும் மாயப்பிசாசின் எதிரிகள். நீ பிறரிடம் பொறுமையைக் கடைப்பிடிக்கும் நேரத்திலும், புன்னகைக்கும் நேரத்திலும் அந்த மாயப் பிசாசு உன்னிடம் இருந்து விலகிவிலகி செல்லும்.

இன்னொரு உண்மை தெரியுமா? அந்த மாயப்பிசாசு உன்னை நெருங்கும் ஒவ்வொரு கணமும் உன் ஆயுளில் ஒரு நாள் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது உன் ஒவ்வொரு கோபமும் உன் ஆயுளில் ஒரு நாளைக் குறைக்கும். இது மருத்துவ ரீதியிலும் உண்மை என்பதை உன் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்.

நீ கோபப்படாமல் பேசுவதால் எதையும் இழந்துவிட மாட்டாய். ‘அடேங்கப்பா… சூரியனையே ஒரு டம்ளரில் கொண்டுவந்துவிட்டாயே?’ என்று மிகச்சூடாக உன் மனைவி காபி கொண்டுவரும் போது புன்னகைத்துப் பழகு. அவளுக்கும் வெட்கம் வரும். சந்தோஷம் வரும். நீ நினைத்த மாதிரி காபியும் வரும்.

சிறையில் இருக்கும் மனிதர்களில் பெரும்பாலோர் கோபத்தில் தவறு செய்தவர்கள்தான். தோல்வி அடைந்தவர்களில் பெரும்பாலோர் கோபத்தில் முடிவு எடுத்தவர்கள். விவாகரத்து வாங்கியவர்களில் பெரும்பாலோர் கோபத்திற்கு அடிமையாக இருந்தவர்கள்தான். கோபத்தினால் ஒரே ஒரு நன்மைகூட யாருக்கும் இல்லை எனும்போது  எதற்காக கோபப்படுவதற்கு ஆசைப்படுகிறாய்..?

இனியும் நீ மாயப்பிசாசுடன் வாழத்தான் போகிறாயா?”” என்று கேட்டார் ஞானகுரு.

மிரட்சியுடன் புன்னகைத்தான் பிரசன்னா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *