ஞானகுரு

கமான் கடவுளே… come on

இறைவனை சந்திப்பது சாத்தியமே

இந்த உலகில் அதிகம் நம்பப்படுவதும், அதிக சர்ச்சைக்கு உள்ளாவதும் கடவுள் என்ற வார்த்தைதான். கடவுளை பார்த்துவிட வேண்டும், அவரிடம் இருந்து ஏதேனும் நன்மைகளை பெற்றுவிட வேண்டும் என்றுதான் அத்தனை மனிதர்களும் துடிக்கின்றனர். அதேநேரம், கடவுளை காண்பது அத்தனை எளிதல்ல என்றும் நினைப்பதும்தான் விசித்திரம்.

கடவுளை காண்பதற்கு என்ன தகுதி வேண்டும் என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன். அவர் தோளில் கை போட்டபடி ஞானகுரு பேசத் தொடங்கினார். ‘’நீ வி.ஐ.பி. கட்டணம் செலுத்தி கோயிலுக்குச் சென்று கடவுள் உருவத்தை தரிசனம் செய்துவிடலாம். ஆனால், அந்த சிலையில் கடவுள் தன்மையை உன்னால் கண்டடைய முடியாது. ஓர் உண்மை தெரியுமா? கடவுளைக் காண கோயிலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிதாக எல்லா மனிதர்களும் கடவுளை நேரில் பார்க்கமுடியும்… தினமும் மனிதர்கள் கண் முன்னே காட்சி தரவே செய்கிறார். ஆனால், அதுதான் கடவுள் என்று மனிதர்கள் உணர்வதுதான் இல்லை’’ என்றார்.

‘’சாமி, புரியலையே…’’ என்று மெல்லிய குரலில் கேள்வி எழுப்பினார்.

‘’சூரியன் பூமியை தன்னுடைய கரங்களால் தட்டியெழுப்பும் உதயத்தை பார்த்திருக்கிறாயா..? மழை பூமியை ஆவேசமாக முத்தமிடுவதை ஆழ்ந்து கண்டிருக்கிறாயா..? மொட்டுக்குள் இருந்து சோம்பல் முறித்து பூவாக மலரும் காட்சியைக் கண்டு அதிசயத்திருக்கிறாயா..? பிரசவத்தில் வெளியே வந்த உயிரின் அலறலைக் கேட்டு பெற்றோரும் மற்றவர்களும் கண்ணில் நீர் வடிய மகிழ்வதைக் கண்டு நீயும் மகிழ்ந்திருக்கிறாயா..? காதை பிளக்கும் சத்தங்களுக்கு இடையிலும் நிம்மதியாகத் தூங்குபவனை ரசித்திருக்கிறாயா..? உடல் இடையூறுகளைத் தாண்டியும் உழைப்பனின் மன உறுதியை ரசித்திருக்கிறாயா..? கீழே விழும் ஒருவனை தூக்கி நிறுத்துவதற்கு ஓடோடி வரும் ஜனங்களின் முகத்தை தரிசித்திருக்கிறாயா..? வயிறு நிறைந்ததும் ஏப்பம் விடும் பிள்ளையைக் கண்டு சிலிர்க்கும் தாயின் இதயத்தை அறிந்திருக்கிறாயா..?  இதுபோன்ற இயல்பான காட்சிகளில்தான் கடவுள் இருக்கிறார். இந்த காட்சிகளைக் காண்பதற்கு யாருக்கும் எந்த தகுதியும் வேண்டியதில்லை. இவற்றில் கடவுள்தன்மை இருக்கிறது என்று நம்பும் மனம்தான் தேவை.

உன் மனசுக்குள் முதலில் கடவுள் தன்மையைக் கொண்டுவா. அதன்பிறகு கடவுளும் வந்து சேர்வார். ஆம், அவருக்குத் தெரியும் எப்போது, எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பது. கடவுளை நேரில் தரிசிப்பதைவிட, இந்த தெய்வீகத் தன்மைதான் அதிக சுவையுள்ளது. ருசித்துப் பார்’’ என்றார் ஞானகுரு.

’’தெய்வீகத்தன்மை எங்கே இருக்கிறது என்று விளக்குவதைக் கேட்டு சிலிர்க்கும் தருணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று சிரித்தார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *