சர்ச்சை

நாகரிக மனிதன் என்பது பொய்.

போர் எனும் பெருந்துயரம்..!

மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டான் என்பது எத்தனை பெரிய பொய் என்பதை அவ்வப்போது நிரூபிக்கின்றன போர்கள். இந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒரு மூலையில் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மனிதனை மனிதன் சுட்டுக்கொன்று, அதற்கு தங்கப்பதக்கம் வாங்கி பெருமைப்படும்  கொடுமையும் நடக்கிறது.

சிங்கம் கொடுமையான விலங்குதான். அதற்கு பசி எடுக்கும்போது எதிரே நிற்பது யானையா, ஒட்டகமா, மானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அடித்து வீழ்த்தி உண்ணத் தொடங்கும். பசி இல்லாத நேரம், படுத்துக்கிடக்கும் சிங்கத்தின் அருகே எந்த விலங்கு சென்றாலும், அது லட்சியம் செய்வதில்லை. இதனை கொடுமையான விலங்கு என்று சொல்லும் மனிதன், தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று சொல்லிக்கொள்கிறான்.

அதாவது, ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக இருக்கிறார்களாம். பிறருடைய சுதந்திரத்திற்கு யாரேனும் இடையூறு செய்தால் தண்டனை நிச்சயம் என்கிறார்கள். அதே மனிதர்கள்தான், ஏதேனும் ஒரு நாட்டுடன் போர் செய்து, தரை மட்டமாக்குகிறார்கள். அன்று எகிப்தில் நடந்ததுதான் இன்று உக்ரைனிலும் நடக்கிறது. சொல்லப்படும் காரணங்கள்தான் வேறு வேறு.

போர் நாடுகளுக்கு இடையில் நடப்பதாக சொல்லப்படுகிறது என்றாலும், இது மனிதனை மனிதன் கொல்வதற்காகத்தான் நடத்தப்படுகிறது. போரும் மரணமும் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் ஒரு கடிதம் இது. இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவில்லாமல் நடக்கிறது. ரஷ்யா உக்ரைன் போர் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த தருணத்தில் அதாவது, ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது, ஈராக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்கப் போர் வீரன், போர் முடிவுக்குப் பின் எழுதிய இந்த கடிதம் மிகவும் முக்கியமானது.

இதுதான் அந்த கடிதம்.

’ஒரு எதிர்பாராத திருப்பத்தில் அந்த ஈராக்கிய வீரன் என் முன்னே நின்றிருந்தான். முன்பின் பார்த்திராத அவனது கைகளிலும் துப்பாக்கி இருந்தது. எனது உயிர் அவன் விரல்களிலும், அவன் உயிர் என் விரல்களிலும் இருந்தது.

அவன் சுண்டுவதற்கு சில வினாடிகளுக்கு முன் நான் சுட்டிருக்க வேண்டும். வீழ்ந்து அடங்கினான். கொஞ்சம் தாமதித்து இருந்தால் நான் அவன் போல் அங்கு வீழ்ந்து கிடந்திருப்பேன்.

அருகில் போய் ஆராய்ந்தேன். அவனது பாக்கெட்டில் ஒரு கசங்கிய கடிதமும், ஒரு பெண்ணின் படமும், ஒரு குழந்தையின் படமும் இருந்தன. கடல் கடந்து எங்கோ உலகின் மூலையில் இருந்து என் குழந்தையின் குரல் ஏக்கத்துடன் கேட்டது. அழுகையை எனக்கு அடக்க முடியவில்லை. அது ஈராக்கிற்கும் கேட்டிருக்காது. அமெரிக்காவுக்கும் கேட்டிருக்காது.’

மனிதனை மனிதன் கொல்லும் போர் தேவைதானா மனிதர்களே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *