தமிழ் லீடர்

ஆட்சி பிடிக்கவே அண்ணா கட்சி தொடங்கினாரா..?

விஜய்க்கு அரசியல் ஆலோசனை

விஜயகாந்த், கமல்ஹாசன் பாணியில் கட்சி தொடங்கியதுமே தேர்தலுக்கு வரும் விஜய்க்கு தி.மு.க.வினர் அரசியல் பாடம் எடுத்துவருகிறார்கள். பெரியாரின் திராவிடர் கழகத்தை உடைத்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதன் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கிறார்கள். அதாவது இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அன்றைய அரசியல் இது தான். ‘’கட்சியை ஆரம்பித்த உடனேயே அண்ணா அவர்கள் ஆட்சியை பிடிக்க முனையவில்லை. துவக்க நாளில் அவர் கூறியது போல எழுத்து மற்றும் பேச்சு உரிமைகளை நசுக்கும் அரசுக்கு எதிராக அணியை திரட்டும் நோக்கிலே செயல்பட்டார். பன்னிரெண்டு ஆண்டுக்ளுக்கு முன்பாக பெரியார் அவரை முதன்முதலாக சந்தித்த போது இளைஞனாக இருந்த காலம் தொட்டு அவரிடம் கற்ற பாடங்கள் அனைத்தையும் திராவிட முன்னேற்ற கழகத்தை வழி நடத்த பயன்படுத்த ஆரம்பித்தார். மாவட்டங்களைத் தாண்டி பேரூர்களில், சிற்றூர்களில், கழகத்தை கொண்டு சென்றார்.

எல்லாக் கூட்டங்களுக்கும் தாமாக செல்லாமல் அடுத்த கட்ட தலைவர்களை கூட்டம் நடத்த, மன்றங்கள் திறக்க, கொடி ஏற்ற அனுப்பி வைத்தார். தான் மட்டுமே பிரதானம் என்பதை விடுத்து அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்கினார் பேரறிஞர். எப்படி பெரியாரிடம் அண்ணா சென்ற போது அடுத்த மாநாட்டை அண்ணாவை தலைமையேற்க செய்தாரோ அது போல இளைஞர்களுக்கு முன்னுரிமை தந்தார். தனது கருத்துகளை எழுத்து மூலம் மக்களிடம் எடுத்துரைத்தார். பகுத்தறிவு பரப்புரையை தனது பொதுக்கூட்டஙகளில் பேசினார். தனது தொண்டர்களை தம்பிகளாகக் கருதி கடிதங்கள் எழுதினார். இதுபோக கலைஞர்,கே.ஆர் ராமசாமி, எஸ்எஸ்ஆர் போன்றோரை பிரச்சார நாடகங்களாக எழுதி மக்களிடம் உறவாடினார்.

கலைத்துரையின் பெரிய மய்யமாக விளங்கிய திரைப்படங்களை எழுதினார். தம்பிகளும் அவரது வழியை பின்பற்ற திரையில் திராவிடம் வளர ஆரம்பித்தது. கதைத் தலைவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர் திமுகவின் கருத்துகளை தங்களது படங்களில் பேசினர். நாளுக்கு நாள் மக்கள் திமுக பற்றி நிறைய அறிந்துக்கொண்டனர். முக்கியமாக 1952 இல் நாட்டில் முதன்முதலாக நடந்த தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை.

தங்களது ஆதரவை வேறு கட்சிகளுக்கு வழங்கியதால் தங்கள் செல்வாக்கு என்ன என்பதை அறிஞர் அண்ணா அறிந்துக்கொண்டார். ஆகவே போதுமான ஆதரவை பெறும்வரை அண்ணா தம்பிகளோடு கட்சியை வளர்க்க எல்லா வகையான முயற்சிகளை பேற்கொண்டார். அதுபோல மக்களின் பிரச்சனைகளுக்காக ஆட்சியாளரை எதிர்க்க தயங்காத கழகம் எல்லாவித போராட்டங்களிலும் கலந்து கொண்டது. பெரியார் குலக்கல்வியை எதிர்த்து போராட்டம் அறிவித்தால் திமுகவும் கலந்து கொண்டது. தலைவர்கள் சிறைக்கு போய் தண்டனை அனுபவிக்க அச்சப்படவில்லை.

மும்முனை போராட்டம், விலைவாசி போராட்டம், கதர் விற்பனையில் தேக்கம் ஏற்பட்ட போது தலைவர்கள் அனைவரும் நெசவாளர்களுக்கு கை கொடுக்க தயங்கியதில்லை. திராவிட நாடு, முரசொலி போன்ற ஏடுகள் கழகத்தின் கொள்கைகளையும் பகுத்தறிவு பிரச்சாரங்களையும் மக்களிடம் கொண்டு சென்றன. 1957 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமா அல்லது இயக்கமாக இயங்க வேண்டுமா என்பதை திருச்சி மாநாட்டில் வாக்கெடுப்பு வைத்து அண்ணா தொண்டர்களின் விருப்பத்தை கேட்டறிந்தார்.

பெரும்பாலான தொண்டர்கள் வாக்கரசியலுக்கு இசைவு தெரிவிக்க முதன்முறையாக தேர்தலில் தி.மு.க போட்டியிட்டு தலைவர் உள்ளிட்ட 15 உறுப்பினர்களை சட்டமன்றத்துக்கு வெற்றியோடு அனுப்பிவைத்தது திமுக. அந்த தேர்தலில் கலைஞர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அன்று முதல் நிரந்தரமாக கழகத்தின் சின்னமாக உதயசூரியன் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக சென்னை மாநகர தேர்தலில் திமுக வெற்றி பெற முதன்முதலாக மேயர் திமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டார் அ.ப. அரசு.

கழகத்தில் யார் அடுத்த தலைவராக அதாவது பொதுச் செயலாளராக வருவது என்ற போட்டியால் முன்னணி தலைவரான சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் கழகத்தை விட்டு வெளியேற கழகம் முதன்முதலாக பிளவை சந்தித்தது. முன்னணி தலைவர்களில் ஒருவரை இழந்த போது கழகம் அவ்வளவு தான் என முதல்வராக இருந்த காமராஜர் பெரிய பணக்காரர்களை தேர்தலில் நிற்க வைத்து, முதலில் வென்ற 15 பேரை தோற்கடிக்க நினைத்தார். அண்ணாவே தோற்றார். அந்த பதினைந்தில் ஒருவரை காமராஜரின் பணபலம் படைத்த வேட்பாளரால் வெல்ல முடியவில்லை. அவர் தான் கலைஞர் கருணாநிதி. அவரோடு சட்டமன்றத்துக்கு 50 பேர் சென்றது குறிப்பிடத்தக்கது.

 அண்ணாவை கழக உறுப்பினர்கள் தேர்வு செய்து மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தது வரலாற்று சிறப்பு. அதுவரை அண்ணாதுரை என்பவர் பேச்சை கேட்காத பிரதமர் பண்டிதர் நேரு அண்ணா, I am a Dravidan stock என பேச ஆரம்பித்த முதல் அண்ணாவின் பேச்சுகளை பிரதமர் மட்டுமல்ல நாடே அறிந்தது. கடுமையான இந்தி திணிப்பை தமிழ்நாடு அன்றைய மதராஸ் சந்திக்க நேரிட்டது. அண்ணாவும் தம்பிகளும் மாணவர்களுக்காக களத்தில் இறங்கியதும் அது பெரிய அரசியல் போராட்டமாக வெடித்தது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தால் கலைஞர் கருணாநிதி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைப் பார்த்த அண்ணா பின்னர் ஒரு பொதுக்கூட்டத்தில் என் தம்பி கருணாநிதியை பார்த்துவிட்டு வருகிறேன்.அவன் தனியாக இல்லை பாம்பு, தேள், பல்லியுடன் சிறையில் உள்ளான். என் தம்பியின் தனிமைச் சிறை தான் எனது யாத்திரை செல்லும் புனித தலம் என வீர உரையாற்றினார். 1967 இல் பொதுத் தேர்தலில் ஏழு கட்சியின் துணையோடு ஆட்சியை பிடிக்க திமுக ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியை பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன் என முதன்முதலாக வெற்றியடைந்த போது பெரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

வந்த மாத்திரத்தில் முதல்வராக அண்ணா, முன்பொரு முறை சங்கிரலிங்கனார் இறக்கும் தருவாயில் அவருக்கு அளித்த வாக்குறுதியான மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயரிட உத்தரவு பிறப்பித்தார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என வரைவு தயாரித்து பெரியாரிடம் கொண்டு சென்ற போது, முன்பாக நடைபெற்ற வைதீக முறைப்படி அல்லாமல் நடந்த அனைத்து சுயமரியாதை திருமணங்களும் செல்லும் எனக் குறிப்பு எழுதி தந்தார் பெரியார். அப்படியே ஏற்று சட்டமாக்கினார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை தான் இனி தமிழ்நாட்டில் தொடரும் என சட்டம் இயற்றி கையொப்பமிட்டார் பேரறிஞர் பெருந்தகை’’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில் இது விஜய்க்கு சொல்ல வேண்டிய அறிவுரை தான். அதேநேரம், கட்சி தொடங்கியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தாரே அதையும் சொல்லுங்கோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *