சைதை துரைசாமி

மழலையர் பள்ளிகளில் மறுமலர்ச்சி

என்ன செய்தார் சைதை துரைசாமி – 139

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதற்கான காரணம் குறித்து கல்வியாளர்களிடம் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி ஆலோசனைகள் நடத்தினார். அந்த நேரத்தில் தான் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு மேயருக்குத் தெரியவந்தது.

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலங்களில் 5 அல்லது 6 வயதில் பிள்ளைகளை பள்ளிக்குச் சேர்க்கும் நிலைமை இருக்கிறது. இந்த பள்ளிகளில் நேரடியாக மாணவர்கள் 1ம் வகுப்பில் சேர்ப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், இன்றைய கால மாற்றத்தாலும் தனியார் பள்ளிகள் பெருக்கத்தாலும் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

அதாவது இப்போது குழந்தைகளை இரண்டரை முதல் மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்க்கும் புதிய மாற்றம் வந்துவிட்டது. இதற்காக தனியார் பள்ளியில் பிரிகேஜி, எல்.கே.ஜி., யுகேஜி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப இந்த வகுப்பறைகள் கவர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஏழை, எளிய மக்கள் என்றாலும் தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்புகளில் சேர்த்து படிக்க வைக்கவே ஆசைப்படுகிறார்கள்.

ஒருசில அரசு பள்ளிகளில் மட்டுமே மழலையர் வகுப்புகள் இருந்தன. அதுவும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதால் அதிக கட்டணம் என்றாலும் தனியார் பள்ளிகளில் பிள்ளையைச் சேர்த்துவிடுகிறார்கள். இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் படித்த பிள்ளையை, அதன் பிறகு அரசு அல்லது மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் விரும்புவதில்லை, மாற்றத்தைப் பிள்ளைகளும் விரும்புவதில்லை. அதனாலே மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்கை விகிதம் குறைவாக இருக்கிறது என்ற உண்மையை மேயர் சைதை துரைசாமி புரிந்துகொண்டார்.

மழலையர் பள்ளி என்ற அஸ்திவாரத்தை மாற்றி அமைக்காமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார். ஆகவே, மழலையர் பள்ளியில் மறுமலர்ச்சி கொண்டுவருவதற்கு விரும்பினார். மாநகராட்சி சார்பாக எத்தனை மாநகராட்சி மழலையர் பள்ளிகள் இயங்குகிறது என்று கேட்டபோது, அந்த அதிர்ச்சிகரமான எண்ணிக்கை சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *