சைதை துரைசாமி

அரசு பள்ளிகளில் முழுமையான ஆய்வு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 137

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கொடுக்கப்படுகிறது. இலவசமாக புத்தகம், நோட்டு என்று ஏராளமான சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக பாடத்திட்டங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இத்தனை வசதிகள், வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு பொதுமக்கள் தயங்குகிறார்கள் என்பது தான் வருத்தம் தரக்கூடிய உண்மை.

ஏனென்றால், அரசுப் பள்ளிகள் கவர்ச்சியாக வடிவமைக்கப்படவில்லை, போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் படிப்பதை கெளரவக் குறைச்சலாகவும், பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்றும் கருதுகிறார்கள்.

இது போன்ற காரணங்களால் அடித்தட்டு மக்கள் தவிர வேறு யாரும் இந்த பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை. மாதக் கடைசியில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நடுத்தர வர்க்கத்து மக்கள் கூட, தங்கள் குழந்தையை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகிறார்கள். தனியார் பள்ளிகளில் கல்விக் கொள்ளை அடிக்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தாலும், கந்துவட்டிக்குப் பணம் வாங்கியாவது பிள்ளையை அங்கு தான் சேர்க்கிறார்கள்.

தங்கள் குழந்தையின் எதிர்காலம் மீது இருக்கும் அக்கறையினால் எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். போட்டிகள் நிறைந்த எதிர்காலத்தைச் சமாளிக்க வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிப்பது மட்டுமே சரியான வழி என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பெற்றோர் மீது எந்த தவறும் சொல்ல முடியாது. ஏனென்றால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற சிந்தனையில் எந்த பெற்றோரும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.

எனவே, தனியார் பள்ளிகளுக்குள் நுழையமுடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த நிலையில் தான் பெருநகர சென்னைக்கு மேயராக வந்தார் சைதை துரைசாமி மாணவர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பொதுமக்கள் தாமாக முன்வரும் வகையில் சீரமைப்பு மேற்கொள்ள விரும்பினார். மாநகராட்சிப் பள்ளி சீர்திருத்தக் கனவுடன் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *