கவுன்சிலிங்

குட்டிப் பிள்ளைகளுக்கும்  மன அழுத்தம்..!

காரணம் யாருன்னு தெரியுமா?

நாமளும் பேசாம குழந்தையாகவே இருந்திருக்கலாம், ஒரு பிரச்னையும் இல்லை என்று சொல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. ஆனால், அந்த பிஞ்சு நெஞ்சுக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டு என்பதுதான் உண்மை.

ஆம், பெரியவர்கள் மட்டும்தான் மன அழுத்தங்களுக்கு ஆளாவார்கள் என்பதல்ல, குழந்தைகளும்தான். தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

இதற்கெல்லாம் எந்தக் குழந்தையும் காரணம் கிடையாது, ஆம், முழுக்க முழுக்க பெற்றோர்தான் காரணம்  என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.  எப்படிப்பட்ட விஷயங்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தம் உண்டாக்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

* குடும்பத்தில் பெற்றோர்களிடம்  தொடர்ந்து நடைபெறும் சண்டை,  குழப்பம், வாக்குவாதங்கள்.

* பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைக்கு போதிய நேரம் ஒதுக்கமுடியாமல் போவது.

* குழந்தைக்குப் பிடித்தமானவர்கள் திடீரென கண்டுகொள்ளாமால் புறக்கணித்தல்.

* குடும்பத்திற்கு வேறு எவரேனும் வந்து அதிகாரம் செய்தல்.

* மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

*  பெரிதாக ஏற்படும் இயற்கை மாற்றம்  அல்லது அதிர்ச்சி அளிக்கும்  நிகழ்ச்சிகள்

* அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள், வலி, வேதனை

* குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

* மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

* பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள், கேலிகள்

* பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

* உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

– இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள். இதனை உடனடியாக கண்டறிவது மிகவும் அவசியம்.

செய்ய வேண்டியவை:

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்

இந்த உலகத்தில் எல்லோரையும்விட நீதான் எங்களுக்கு முக்கியம் என்று பெற்றோர் அவ்வப்போது சொல்லி அன்பு காட்டினால், குழந்தை எப்போதும் பூ போன்ற மலர்ந்த முகத்துடன் இருக்கும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர். தொடர்புக்கு: 9840903586

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *