சட்டம்

நில ஆக்கிரமிப்பாளர்கள் ஜாக்கிரதை

பாதுகாப்புக்கு வழிகாட்டும் வழக்கறிஞர்

கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, சீட்டு கட்டி, நகையை அடகுவைத்து எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டு மனையை வாங்கிவிடுகின்றனர். வீட்டு மனை வாங்கியாச்சு, இனி வீடு கட்டும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று சிலர் அசட்டையாக இருப்பதுதான், ஆக்கிரமிப்பு நடப்பதற்கு வழியமைத்துத் தருகிறது என்று எச்சரிக்கை செய்கிறார் வழக்கறிஞர் நிலா.


 ரியல் எஸ்டேட்  மோசடி குறித்துப் பேசும் நிலா,   “ஒரு நிலத்தை வாங்கியபிறகு, கவனிப்பு இன்றி அதனை  அப்படியே விட்டு வைப்பதில் பலவிதமான அபாயங்கள் உண்டு.  அவற்றில் மிகவும் சிக்கலானது, ஆக்கிரமிப்பு.   எல்லைக் கற்கள் நட்டு, மனையின் பாதுகாப்பை உறுதி செய்திருப்போம். ஆனாலும், பக்கத்துக்கு மனையில் அல்லது அருகில் வேறு ஏதாவது கட்டடம் கட்டும்போது, நம் மனையில் சிறிய பகுதியை அவர்கள் சேர்த்து கட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.

ஒருசிலர், எல்லைக் கற்களை வைத்து மட்டுமே மனையின் பாதுகாப்பை உறுதிபடுத்துவார்கள். ஆனால், இந்த எல்லைக் கற்கள் எப்போதுமே அதே இடத்தில் இருக்குமா என்றால், இல்லை என்றே கூறலாம். காரணம், பல்வேறு காரணத்தினால் அங்குள்ள எல்லைக் கற்கள் காணாமல் போயிருக்கும் அல்லது உடைந்து இருக்கலாம். யாராவது தோண்டி எடுத்து வேறு இடத்துக்கு மாற்றி அமைத்து இருக்கலாம்.


ஆகையால், நாம் வாங்கியிருக்கும் மனையின் நான்கு பக்கத்திலும், மூன்று அடியில் சிறிய சுவர் எழுப்பி, அதனை மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்து கறுப்பு வண்ணத்தில் உரிமையாளர் பெயர், மனை எண் இரண்டையும் குறிப்பிட்டு வைப்பது சிறந்தது. ஒரு சிலர் அவர்களது மனையில் வீடு கட்டும்போது செங்கல், ஜல்லி, மணல் என அனைத்தையும் நம் வீட்டு மனையில் கொட்டிவைத்து ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்லாமல், சில அடி இடங்களையும் சேர்ந்து வீடு கட்டி விடுவார்கள். விளைவு, நமக்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆக நிலமோ, வீடோ காலியாகப் போட்டு வைத்திருந்தால் பலவித சிக்கல்கள் உண்டு. அங்குள்ள மின் இணைப்புகள், நீர் இணைப்புகள் போன்றவை பழுதடைந்து போகலாம்.

அதனால்  ஒரு மனை வாங்கிவிட்டீர்கள் என்றால், அந்த இடத்தில் உங்களுக்கான வீடு கட்டுவதற்கு முன் அதனை முதலில் பாதுகாத்து வைக்க, மனையைச் சுற்றி வேலி அமைப்பது மிகவும் சிறந்தது. இல்லை என்றால்,  ‘எல் ’வடிவில் பாதுகாப்பு சுவர் ஏற்படுத்தி இருக்க வேண்டும். எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அவ்வப்போது மனை இருக்கும் இடத்துக்குச் சென்று பார்த்து வருவது சிறந்தது. மேலும், நிலத்தை நோக்கி சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்துவது நல்லது. (வீட்டைக் காலியாக வைத்திருந்தால் அதை உறுதியான பூட்டுக்களால் பூட்டுவதும், திருடர்கள் வந்தால் அலாரம் அடிக்கும்படியான வழிவகை செய்வதும் முக்கியம்).  ‘இந்த நிலம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அணுகுங்கள்’ என்பதுபோல அறிவிப்புப் பலகையை உங்கள் நிலத்தில் நட்டுவைப்பதும் தவறில்லைஒ.


உள்ளூர் காவல் நிலையத்தில் உங்கள் நிலத்துக்கு ஆக்கிரமிப்பு அபாயம் இருக்கும் பட்சத்தில் புகார் கொடுத்து வைப்பதில் தவறில்லை. உங்கள் நிலம் இருக்கும் பகுதியில் நம்பத்தகுந்த ஒருவரிடம் நட்பாக இருங்கள். இதன்மூலம் ஏதாவது ஆக்கிரமிப்பு தொடங்கினால் அவர் உங்களைத் தொடர்புகொண்டு இதைத் தெரிவிக்கலாம். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தால், உள்ளூரிலுள்ள நம்பகமான ஒருவரிடம் உங்கள் நிலத்தை அவ்வப்போது பார்த்துவிட்டு வரச் சொல்லுங்கள். ஆக்கிரமிப்பு என்பது ஒருபோதும் நிகழவே கூடாது என நினைத்தால் செக்யூரிட்டி ஒருவரைக் காவலுக்குப் போடலாம். முக்கியமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் இதற்கு ஆகும் செலவைப் பொருட்படுத்தக் கூடாது. காவலாளியை நம்பத் தகுந்த செக்யூரிட்டி ஏஜன்ஸி மூலமாக நியமிப்பது நல்லது.


மேலும், வீட்டில் வசிக்கும்போது நிலத்துக்குக் காப்பீடு வாங்க வேண்டிய அவசியம். அதற்கான கட்டணம் மிகவும் குறைவுதான். அதனால்,  நிலத்தை காலியாக விட்டுவைக்கும்போது அதற்குக் காப்பீடு எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கான  காப்பீட்டுத் தவணை என்பது குறைவுதான். வழக்கமான காப்பீடுகளில் ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், ஒருசில வகைக் காப்பீடுகளில் ஆக்கிரமிப்பும் சேர்க்கப்படுகிறது. அதாவது, யாராவது உங்கள் நிலத்தை ஆக்கிரமித்தால் அதை நீக்குவதற்காக உங்களுக்கு ஆகும் செலவைக் காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும்” என்றார்.

அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவர்களிம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்தான். இல்லையென்றால், வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும்தான் அலையவேண்டியிருக்கும்.

  • வழக்கறிஞர் நிலா, மதுரை உயர் நீதிமன்றம். தொடர்புக்கு: 7299753999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *