சைதை துரைசாமி

’கவர்’ வாங்காமல் புரட்சி செய்த மேயர்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 132

மாநகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தகவல் சென்னை முழுக்க பரவியதும், தினமும் மக்கள் மனு கொடுக்க வந்தார்கள். நிறைய பேர் மேயர் சைதை துரைசாமியிடம் மட்டுமே கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்று அவரை சந்தித்துக் கொடுத்தார்கள்.

தினமும் மனு வாங்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டதால் மேயர் சைதை துரைசாமியின் வீட்டிலேயே நிறைய பொதுநலச் சங்கத்தினரையும் பொதுமக்களையும் சந்தித்து மனுக்கள் வாங்கத் தொடங்கினார். மேலும், மேயர் அலுவலகத்திலும், ஆய்வு நடத்தப்படும் இடங்களில் என்று எல்லா நேரமும், எல்லா இடங்களிலும் பொதுமக்களின் புகார் மனுக்களை சைதை துரைசாமி பெறத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் புகார் மனு வாங்குவதில் சைதை துரைசாமி ஒரு புதிய நடைமுறையைக் கையாண்டார். அதாவது கவருக்குள் வைத்து கொடுக்கும் புகார் மனுக்களை அவர் கையால் வாங்கவே மாட்டார். கவரில் இருந்து பிரித்து தனி பேப்பராகக் கொடுக்கும் புகார் மனுக்களை மட்டுமே வாங்குவார்.

யார், என்ன மனு கொண்டுவந்தாலும், கவரில் இருந்து வெளியே எடுத்து, கடிதத்தை மட்டும் கொடுக்கச் சொல்வார். யாராவது கவரோடு ஒட்டிய மனுவை கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்றாலும், தபால் மூலம் மனு வருகிறது என்றாலும் அவற்றை அப்படியே உதவியாளரிடம் கொடுத்துவிடுவார். உதவியாளர்கள் அந்த கவரை கிழித்து அதிலிருந்து எடுத்துக் கொடுக்கும் கடிதத்தை மட்டும் வாங்கிப் படிப்பார்.

இதற்கான காரணத்தை அதிகாரி ஒருவர் சைதை துரைசாமியின் உதவியாளரிடம் கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், ‘ஒரு சிலர் மனு தரும் கவருக்குள் பணம் வைத்துத் தருவது உண்டு. அப்படி பணம் தன் கைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு பழக்கம் வைத்திருக்கிறார். மேலும், மொட்டைக் கடுதாசி எழுதுபவர்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்திவிடலாம். கையில் மனு வாங்குவதால் யாரும் மொட்டைக் கடிதம் கொடுப்பதில்லை’ என்று விளக்கினார். இதனால், ‘கவர்’ வாங்காத மேயர் என்று பாராட்டப்பட்டார். கவர் என்பதற்கு லஞ்சம் என்றொரு பொருள் உண்டு. அதையும் தொடாதவர் என்பதால் கவர் வாங்காத மேயர் என்று பெருமையாகப் பாராட்டப்பட்டார்.

புகார் எண் 1913 என்பதில் நடந்த மெகா சீர்திருத்தம் பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *