சட்டம்

செக் பவுன்ஸ்க்கு எப்படி சட்ட நடவடிக்கை எடுப்பது?

சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்

கேள்வி : எங்களுடைய உறவினர் திடீரென காணாமல் போய்விட்டார். காவல் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

  • என்.மீனாட்சி, விருதுநகர்

நிலா :

உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் இதற்காக ரிட் தாக்கல் செய்யலாம். நீதிமன்றத்திடமிருந்து எழுத்துப் பூர்வமாக உத்தரவு பெறுவதை ரிட்டன் ஆர்டர் என்பார்கள். இதன் சுருக்கமே ரிட் என்றழைக்கப்படுகிறது. இந்த உத்தரவு பெறுவதற்கு ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழில் ஆட்கொண்டர்வு மனு எனப்படும். காணாமல் போனவர் மட்டுமின்றி, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவருவதற்கும் இந்த ரிட் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம்.

கேள்வி :  எனக்கு கடன் தர வேண்டியவர் ஒரு செக் கொடுத்தார். அது ரிடர்ன் ஆகிவிட்டது. பணம் தர மறுக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • எஸ். மலரவன், சாத்தூர்.

நிலா :

செக் பவுன்ஸ் (Cheque bounce) ஆவதை செக் ரிடர்ன் என்று சொல்வார்கள். பொதுவாக, செக் பவுன்ஸ் ஆவது குற்றச்செயல் என்பதால் செக் வழங்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

போதிய பணம் இல்லை என்ற காரணத்தினால் செக் ரிடர்ன் ஆகியுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். போதிய பணம் இல்லை என்றால் செக்குடன் ஒரு மெமோ கொடுப்பார்கள். அந்த மெமோ, காசோலை ஆகியவற்றுடன் என்ன காரணத்துக்காக செக் கொடுக்கப்பட்டது என்பதை விளக்கி, வட்டியுடன் பணம் கட்டுமாறு செக் கொடுத்தவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் அவர் பணம் கொடுக்கவில்லை என்றால் பவுன்ஸ் ஆன செக், வங்கி மெமோ, ஸ்பீடு போஸ்ட் செய்த ரசீது, வக்கீல் நோட்டீஸ் ஆகிய நான்கையும் ஆதாரமாக வைத்து கோர்ட்டில் கேஸ் போடலாம். இதற்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கேள்வி : புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா..? பழைய வழக்குகள் எப்படி விசாரிக்கப்படுகிறது..?

  • சி.மாரிமுத்து, பாண்டியன்நகர்.

நிலா :

கடந்த ஜூலை 1 முதல் மூன்று கிரிமினல் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்திய தண்டனைச் சட்டம் (IPC தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டங்கள் எல்லாமே 2024, ஜூலை 1 தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முந்தைய குற்றங்களுக்கு பழைய சட்டத்தின்படியே விசாரணைகள் நடக்கும். வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படாத வழக்குகள் என்றால், அது புதிய சட்டத்தின் படி செயல்படும்.

  • எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling

உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை. தொடர்புக்கு : 7299753999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *