அரசியல்

வெள்ளையன் என்றொரு போராளி

தி.மு.க.விடம் சிக்காத திமிங்கலம்

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உயிர் இழந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அத்தனை அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்

வெள்ளையன் பற்றிய சில தகவல்கள்.

வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், வாழ்வாதார சிக்கல்களுக்காகவும் மட்டுமின்றி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழர் நலன் சார்ந்த சிக்கல்களுக்காகவும் வணிகர்களை ஒன்றுதிரட்டி போராடியவர்.

பெருநிறுவனங்களுக்கு எதிராக வணிகர்களையும், வெகுமக்களையும் திரட்டிய போராளி. 20 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட VAT வரியை எதிர்த்து நின்றவர். பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் கால் பதித்தால் நடக்கப் போகும் சீரழிவுகளை எச்சரித்து பரப்புரையும், போராட்டத்தையும் மேற்கொண்டவர்.

வால்மார்ட் முதல் ரிலையன்ஸ் கடைகள் வரை அவர் எதிர்த்து நின்று சாமானிய கடைகளை காக்கப் போராடியவர். 2009 முத்துகுமார் தன்னை நெருப்பிற்கு திண்ணக்கொடுத்து தமிழினத்தை தட்டி எழுப்பினான். அச்சமயத்தில் முத்துக்குமாரின் வித்துடலை பாதுகாத்து பேரெழுச்சியாக மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தவும், பேரலையாக ஆயிரக்கணக்கில் தோழர்கள் திரண்டு தமிழ்நாட்டின் உணர்வெழுச்சி ஊர்வலத்தை நடத்திக்காட்டியவர்.

அன்றய திமுக அரசின் கடும் நெருக்கடி, காவல்துறை அடக்குமுறையை கடந்து துணிந்து நின்று முத்துக்குமார் உடலுக்கான மரியாதை செலுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். தொடர்ந்து முத்துக்குமாரின் சாம்பலை தமிழகமெங்கும் மாணவர்களை வைத்து கொண்டு சென்று எழுச்சி உருவாக்கினார்.

ஈழப்போர் நிறுத்தத்திற்காக அவரது போராட்டம் தன்னிகரில்லாதது. வணிகர்கள் சிக்கலுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் அமைப்பாக இருந்தவர்களை ஸ்டெர்லைட், அணு உலை, காவிரி, 7 தமிழர் விடுதலை என பலவேறு போராட்டங்களுக்குள் அழைத்து வந்தார். தூத்துக்குடியில் மக்கள் திரள் போராட்டம் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக திரண்டதில் வணிகர்கள் பங்கு காத்திரமானது.

மோடிக்கு எதிராக கடையடைப்பை நடத்தியவர். மோடியோடு கைகோர்த்து நின்ற எடப்பாடியாரின் ஆட்சியை அம்பலப்படுத்தி போராடியவர். தமிழ்த்தேசியத்தின் சனநாயக குரலாக, சாமானியனின் அரணாக, இயக்கங்களின் தோழனாக, அனைவரையும் அன்போடு அரவணைத்து கம்பீரமாக முன்நிற்கும் களப்போராளி.

பெட்டிக் கடைகளில் கோக், பெப்சி போன்ற அந்நியப் பானங்கள் விற்பனை செய்வதை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற இவரது பார்வையை வணிகர்கள் கடைப்பிடித்திருந்தால் ஒரு மாபெரும் புரட்சி வெடித்திருக்கும் என்பது உறுதி.

தி.மு.க.விடம் சிக்காதவர் என்பதாலே வணிகர் சங்கம் உடைக்கப்பட்டது. ஆனாலும், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக போராடிக்கொண்டே இருந்த வெள்ளையன் மரணம் அடைந்திருக்கிறார். போராளிகள் மரணம் அடைந்தாலும் போராட்டம் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *