ஞானகுரு

ஏழ்மைக்குக் காரணம் முன் ஜென்ம பாவம்..?

ஞானகுரு தரிசனம்

கண்ணில் தென்பட்ட அத்தனையும் வழிகள் என்பதுதான் ஞானகுருவின் பயண தத்துவம். மனம் போன போக்கிலும் கால் போகும் போக்கிலுமாக நடந்துசென்ற நேரத்தில், சாக்கடை ஆற்றின் கரையில் குடிசைகள் நிரம்பியிருப்பதைக் கண்டு உள்ளே நுழைந்தார்.

ஒவ்வொரு தடுப்பும் ஒவ்வொரு வீடாக இருக்கும் அவலத்தைக் கண்டபடி நகர்ந்தார். யாரும் அவரை தடுத்து நிறுத்திக் கேட்கவில்லை. நாலைந்து பெண்கள் ஒன்றுகூடி பேசியிருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தார்.

‘’யாருய்யா… நீ… போலீஸுக்குப் பயந்து இங்கே வந்திருக்கியா..?’’ என்று கேட்ட பெண்ணை பார்த்து சிரித்தார்.

‘’சாமியாரா.. அவரெல்லாம் இந்த பக்கத்துக்குள்ள வர மாட்டாரே…?’’ இந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் சிரித்தார்.

‘’எல்லாத்துக்கும் சிரிக்கிறே… நீ என்ன லூசா..?’’ கேள்வியைக் கேட்டு மற்ற பெண்களும் சிரித்தார்கள். இதற்கும் சிரிப்புதான் பதிலாகக் கிடைத்தது. நால்வரில் ஒரு பெண் கொஞ்சம் உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினாள்.

‘’சாமியாருன்னுதான் நினைக்கிறேன்… பசிக்காம இருக்க ஏதாச்சும் வழி இருக்குதா…’’ என்று கேட்டாள்.

‘’நாக்கை உள்நோக்கி மடக்கி மேலண்ணத்தில் ஒட்டிக்கொள். அப்படி நீ லம்பிகா யோகத்தில் இருக்கும் வரையிலும் உனக்கு பசியும் இல்லை, எந்த வேதனையும் இல்லை” என்றார் ஞானகுரு.

நாக்கை ஒட்டிப்பார்த்த பெண்கள், சட்டென அதை கைவிட்டார்கள். ‘’அட போ சாமி, ஏதாச்சும் சிம்பிளா சொன்னா என்ன..?” என்றதும் சிரித்தார் ஞானகுரு.

ஒரு பெண் முன்னே வந்து, ‘‘ஏஞ்சாமி… இன்னாத்துக்கு எங்களை மட்டும் ஏழையா படைச்சான்? வூடு… வாசல்னு எப்ப நாங்க நிம்மதியா இருக்கிறது?’’ என்று கேட்டாள்.

’’இப்படி நீ உன்னையே  கேள்வி கேட்டுக் கொள்ளாததுதான் காரணம்…’’ .

’’என்னா சாமி… நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு சொல்ற…’’ என்றாள்.

அந்தப் பெண்ணை அருகில் அழைத்த ஞானகுரு, ’’உங்களது ஏழ்மைக்கு என்ன காரணம் என நீ நினைக்கிறாய்?’’

’’ம்… என்னத்தைச் சொல்றது, எல்லாம் எங்க தலையெழுத்து. எல்லாம் போன ஜென்மத்துல செஞ்ச பாவம்…’’  என்றாள்.

’’அப்படி ஒரு காரணம் இருக்கவே முடியாது பெண்ணே… உன்னிடம் யாராவது இப்போது ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அடுத்த பிறவியில் தருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வாயா? அதுபோன்றுதான் கடந்த பிறவியில் செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் கஷ்டப் படுகிறேன் என்று சொல்வது’’

அதற்குள் அங்கே இன்னும் சில ஆண்களும் பெண்களும் சேர்ந்துகொண்டார்கள். உட்கார இடமின்றி சுற்றிக் கொண்டார்கள். ஒருத்தி நெளிந்து போன டம்ளரில் காபி கொண்டுவந்து, ‘‘சாமி காபி குடிப்பீங்களா…’’ என்று தயங்கியபடியே கேட்டாள்.

’’நன்றி…’’ என்றபடி வாங்கிக் குடித்தார். ஒரு இளைஞன், ‘‘அப்படின்னா இன்னாத்துக்கு கொஞ்சபேர் பணக்காரங்களாவும், மத்தவங்க ஏழையாவும் இருக்கணும்…’’  என்று கேட்டான்.

’’மனிதனது பிறப்பு என்பது மழைத்துளிகளைப் போன்றது. எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுகிறது. இதோ இந்த சாக்கடையில் விழும் மழை சாக்கடையாகிறது, கடலில் விழும் தண்ணீர் உப்புத் தண்ணீராகிறது. குளத்தில் விழும் நீர் குடி நீராகிறது. அதுபோலத்தான் பிறப்பு எந்த குடும்பத்தில் நிகழ்கிறதோ, அந்த தன்மையை பெறுகிறார்கள் அவ்வளவுதான்… முன் ஜென்ம பாவம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதாவது நீ உன் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பாரம்பரிய நோய் மட்டும்தான் அது….’’

’’அதெல்லாம் பேசாத சாமி… ஏழையா கீறவன் பணக்காரனா ஆவ முடியாதா?’’

’’ஏன் முடியாது. ஏழைகள் உடலால் உழைக்கிறார்கள். பணக்காரர்களால் மூளையால் உழைக்கிறார்கள். ஏழைகளும் மூளையால் உழைத்தால் வெற்றி பெற முடியும்..’’

’’அப்படின்னா என்ன அர்த்தம் சாமி… எங்களுக்கு மூளை இல்லீயா..?’’ ஒருவன் கோபமானான்.

’’மூளை இருப்பது முக்கியமல்ல, அதனை சரியாக பயன்படுத்தத் தெரிய வேண்டும்…. இன்று பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாமே ஒரு காலத்தில் ஏழைகளாக இருந்தவர்கள்தான். அதனால் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக மாற முடியும்…’’ என்றவர் சிறிது நிறுத்தி, ‘‘இங்கே இருக்கும் உங்களில் வசதியானவர் யார்?’’ என்று கேட்டார்.

’’தோ கீதே, ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடு. அதுலகீற சண்முகம் துட்டுக்காரன். வீட்ல டி.வி. கீது… பிரிட்ஜ் கீது. அவன்தான் எங்களுக்கு லோன் தர்றான், வட்டிக்குத்தான்…’’ என்று ஒரு பெண் வேகமாக முன்வந்து சொன்னாள்.

’’உங்களில் ஒருவனாக இருந்தும் அவன் மட்டும் எப்படி ஜெயித்தான்..?’’

பதில் தெரியாமல் விழித்தார்கள்…

‘’அது தண்ணியடிக்காது…’’ என்று ஒருத்தி சொன்னாள்.

’’நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்களில் இருந்த ஒருவர் முன்னேற முடிகிறது என்றால், உங்களால் முடியாதா? அவர் உங்களைப் போன்று எந்தத் திட்டமும் இன்றி நாளெல்லாம் உழைப்பவராக இருக்க மாட்டார். ஆனால் நிச்சயம் உழைப்பார். எல்லோரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப, திறமைக்கு ஏற்ப மூளையைப் பயன்படுத்துங்கள். நீங்களும் பணம் சேர்க்கலாம், செல்வந்தர்கள் ஆகலாம்…’’ என்றார்.

அவர்கள் யோசிக்கத் தொடங்கிய நேரத்தில், நடக்கத் தொடங்கினார் ஞானகுரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *