யாக்கை

நாக்கு இருக்க டெஸ்ட் எதுக்கு..?

மருத்துவத்தில் புது டெக்னாலஜி

நாக்கின் நிறத்தை வைத்தே நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் 98%மிக துல்லியமாக கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பேராசிரியர் அலி அல்-நாஜி, ‘மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு பிரத்யேக இமேஜிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய முடியும்.

அந்த ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, ஆஸ்துமா, கல்லீரல், பித்தப்பை பிரச்சினை, பிற வாஸ்குலர் பாதிப்புகள், இரைப்பைகுடல் நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், கோவிட் ஆகியவற்றை எளிதாகக் கண்டறிய முடியும். இதன் வாயிலாக அறியப்படும் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமானவையாக இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு ஊதா நிறத்திலும், பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்திலும் இருக்கிறது. நாக்கு வெள்ளையாக இருப்பது ரத்தசோகையைக் குறிக்கும். ஆழமான சிவப்பு நிற நாக்கு கோவிட்டையும், வயலட் நிற நாக்கு வாஸ்குலர் அல்லது இரைப்பை அல்லது குடல் பிரச்சினை அல்லது ஆஸ்துமாவை குறிக்கும்.

நாக்கின் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றைக் கொண்டு உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிவது என்பது சீன மருத்துவத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முறை. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த ஏ.ஐ. கணினி பகுப்பாய்வு முறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த டெஸ்ட் செய்வதற்கு செலவு மிகவும் குறைவு என்பதே மக்களுக்கு நல்ல செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *