மருத்துவர்கள்

மருத்துவத் தோழிக்கு துணை நிற்போம்

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்

மருத்துவரை கடவுளாகப் பார்க்கும் இந்தியாவில் தான், ஒரு பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த கொலைக்கு நியாயமும் தீர்வுகளும் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை நோய்களுக்கான எம்.டி. பட்டப்படிப்பு பயிலும் இரண்டாம் வருட மருத்துவ மாணவி டாக்டர் மெளமிதாவுக்கு வயது 31.

வழக்கம்போல் தனது சகாக்களுடன் முழு நாள் பணியைத் தொடங்குகிறார். மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்களது பணியில் நேரத்திற்கு சாப்பிடவோ உறங்கவோ முடியாது. எனவே இவரும் ஏனைய துறைகளில் பணியாற்றும் மருத்துவ மாணவர்களும் பின்னிரவு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இரவு உணவை சாப்பிடுகின்றனர்.

தனது தாய்க்கு போன் செய்து தான் சாப்பிட்டு விட்டதையும் தூங்கப் போவதையும் உறுதி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டுக்குத் திரும்ப முடியாது என்பதாலும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் ஓய்வெடுக்க பிரத்யேக அறை எதுவும் ஒதுக்கப்படுவதில்லை என்பதாலும், அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் செமினார் ஹாலுக்குள் செல்கிறார்.

அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் செமினார் அரங்கில் மெளமிதா இறந்து கிடக்கும் தகவல் சக மாணவர்களுக்குத் தெரியவருகிறது. ஆடைகள் களைந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அவரது உடல்  மருத்துவமனை சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேநேரம், மெளமிதாவின் பெற்றோருக்கு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்டதும் உடனடியாக பயிற்சி மருத்துவர்களும் மாணவர்களும் பேராட்டத்தில் குதிக்கின்றனர். சட்ட ஒழுங்குப் பிரச்சனை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் காவல் துறை குவிக்கப்படுகிறது. அம்மாநில முதலமைச்சரின் தனிக்கவனத்தை இந்த நிகழ்வு பெறுகிறது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் வேகம் எடுக்கவில்லை என்றதும், நாடு முழுக்கப் பெரும் போராட்டம் நிகழ்கிறது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு  அந்த அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சஞ்சய் ராய் எனும் நபர் நுழைகிறார்.

சட்ட மருத்துவ அறிவியலில் “ரெஸ் இப்சா லாகிட்டர்” என்ற பதம் உண்டு. அதாவது “சாட்சிகள் அதற்குத் தானே சாட்சி கூறும்” (THINGS SPEAKS FOR ITSELF). சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ப்ளூடூத் ஹெட் செட்  ஒன்று தற்போது சாட்சியாக மாறியுள்ளது. அந்த ஹெட்செட் இந்த குற்றம் சாட்டப்படும் நபரின் ஃபோனுடன் ஏற்கனவே பேர் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இந்த நபர் கொல்கத்தா போலீஸுக்கு உதவும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் என்பதும் இதை வைத்து போலீஸ் போல அதிகாரம் செய்து கொண்டு திரிந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

மெளமிதாவின் உடலை மூன்று சட்ட மருத்துவத் துறை நிபுணர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுடைய பிரேதப் பரிசோதனை ஆவணத்தின் படி, இறப்பிற்கான காரணமாக கழுத்து நெறிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்துள்ளது.

பிறப்புறுப்பில் இருந்து விந்து திரவம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனினும் 151 கிராம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கர்ப்பப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளின் மொத்த எடை என்பது புலனாகிறது. அவரது உடலில் உள்ள எலும்புகள் எதிலும் முறிவு ஏற்படவில்லை. எலும்பு மூட்டுகள் எங்கும் விலகி இருக்கவில்லை. இடுப்பெலும்பு உடைக்கப்பட்டது போன்ற அனைத்தும் வதந்திகள் என்பது தெரிகிறது.

அவரது உடலில் பலவந்தமாக வன்புணர்வு செய்யப்பட்ட போது ஏற்படும் நகக் காயங்கள், கடித்ததால் ஏற்படும் காயங்கள் உள்ளன. இந்த காயங்கள் அனைத்தும் இறப்பிற்கு முன் நேர்ந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பின் காரணத்திற்காக அறிக்கையில் பாலியல் வன்புணர்வு நடந்திருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடுஞ்செயலைக் கண்டித்து நீதி வேண்டி நாடு தழுவிய மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக சில மாறுதல்கள் நடந்துள்ளன.

கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வுக் கொலை வழக்கை சுவோ மோட்டோ வழக்காக (சுயமாக நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் வழக்கு) பதிவு செய்து தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்சு நீதி விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் முழு அக்கறை எடுத்துக்கொண்டு கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறது.

நடுவண் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய கமிட்டி அமைத்துள்ளது

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் அரசு மருத்துவமனைகளில்  பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்களின் இயக்கம், காவலாளிகளை நிற்க வைப்பது, போலீஸ் பீட் போன்றவை தொடர்ந்து நிகழுமாறு மாவட்டந்தோறும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

16 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்புணர்வு நிகழ்வுகள் நம் நாட்டில் பதிவு செய்யப்படுகிறது( பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் இருக்கலாம்)  என்பதை எண்ணும் போது மனம் அச்சம் கொள்வதைத் தடுக்க முடியவில்லை.

இந்த நிலை மாற வேண்டும். நம்மிடம் இருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும்.

For Contact : 94433 56866

கொலைக்கு என்ன காரணம்..?

சம்பவம் நடந்த தினத்தில் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். அதன் பிறகு மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர்.

அந்த நான்கு மருத்துவர்களும் சென்றபிறகு பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சஞ்சய் ராய் என்பவர், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்று பல்வேறு யூகங்கள் சொல்லப்படுகின்றன.

மெளமிதாவின் சடலம் மீட்கப்பட்ட 3 மணி நேரத்திற்குப் பிறகே மருத்துவனையிலிருந்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. முதல் போனில், ‘உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை’ என்று கூறியுள்ளார்கள். அடுத்த 22 நிமிடம் கழித்து போன் செய்து ’இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துக் கொண்டார்’ என்றும் பொய்யாக கூறியுள்ளார்கள்.

ஏன் பொய் சொன்னார்கள், கொலையை மறைக்கப் பார்த்தார்களா? கொலையாளிகளை தப்பிக்க வைக்க முயற்சித்தார்களா? என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. அதேநேரம், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட தகவலை பிரேத அறிக்கை உறுதி செய்யவில்லை என்றாலும் அவருடன் பணியில் இருந்தவர்கள் இன்னமும் கூட்டு பலாத்காரம் என்றே சொல்லிவருகிறார்கள்.  

குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய்ராய்க்கு நான்கு முறை திருமணம் நிகழ்ந்துள்ளதாகவும் மற்ற மூவரும் அவனை பிரிந்துச் செல்ல காரணம் படுக்கையறையில் மூர்க்கதனமாக நடந்துக் கொண்டதும், அடித்து துன்புறுத்தியதும் என காவல்துறை விசாரணை சொல்கிறது. இப்படிப்பட்ட ஒரு நபரை எப்படி காவல் துறையினர் ஊர்க்காவல் படையில் சேர்த்து வைத்திருந்தனர் என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.

கொலை நடந்த போது ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் தலைவராக இருந்த சந்தீப் கோஷ் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதும் அவர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கல்கத்தாவில் வேறொரு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக அவர் நியமிக்கப்பட்டது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

மாநில அரசின் விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. இந்த மருத்துவமனையில்  மருந்துகளை கையாளும் பிரிவில் நிகழ்ந்த ஊழலை சுட்டிக்காட்டியதன் காரணமாகவே மெளமிதா கொல்லப்பட்டதாகவும், இந்த கொலையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி மேற்கு வங்க அரசில் பணியாற்றி வரும் பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், சக மருத்துவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்கு அறை டீனின் (மருத்துவமனை முதல்வர்) முழுக் கட்டுப் பாட்டில் உள்ளது என்றும், இங்கு டீனின் அனுமதி இன்றி யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் மெளமிதா எதற்காக கருத்தரங்கு அறைக்குச் சென்றார்? அவரை அங்கே அழைத்தது யார்? சஞ்சய் ராய் ஏன் அங்கு சென்றார்? அவரை அங்கே வரச் சொன்னது யார்? கொலை செய்யப்பட்ட பின்பு கருத்தரங்கு அறையை உடனடியாக சுத்தம் செய்யச் சொன்னது யார்? சிபிஐ அங்கு சென்ற நேரத்தில் கொலை நடந்த இடமே மாற்றப்பட்டது என்று சொல்கிறது, அப்படி மாற்றப்பட்டது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 அன்று மருத்துவ மாணவர்களின் போர்வையில் ஆர்.ஜி.கே மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்து 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவசர சிகிச்சை பிரிவு முற்றிலும் உருக்குலைந்து போயிருக்கிறது. ஆதாரத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றே கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் கவனம் செலுத்துவதால் இனி, நியாயமான விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பாலியல் வல்லுறவு?

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல் இடத்தில் இருப்பது பாலியல் வன்கொடுமை தான். ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளை பலவந்தப்படுவது அனைத்துமே பாலியல் வன்கொடுமை தான். இது திருமண உறவிலும் உள்ளது. இந்த பூமியிலுள்ள 195 நாடுகளிலும் பெண்கள் மீது வன்முறை நடக்கிறது என்பதே அருவருப்பான உண்மை. இந்தியாவை விட கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த குற்றம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக போர்க்குற்றம், மற்றும் உள்நாட்டுக் கலவரம் நடைபெறும் எத்தியோப்பியா, இலங்கை, வங்கதேசம் போன்ற இடங்களில் இந்த குற்றம் அதிகம் நடைபெறுகிறது.

போதையில் நடப்பதாகவும், மனநலக் குறைபாடு காரணமாகவும் இத்தகைய செயல் நடைபெறுவதாகக் கூறுவதை ஏற்கவே முடியாது. ஏனென்றால் பெரும்பாலும் தெரிந்த நபர்களே இத்தகைய குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கென சரியான சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கிறார்கள் அல்லது சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள். எனவே, இவர்களுக்கு மரணத்தை விட கொடூர தண்டனை கொடுப்பதே சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *