சினிமா

மிஸ் பண்ணிட்டீங்க சூரி

’விடுதலை’, ‘வாழை’ வரிசையில் ‘நந்தன்’

இரா.சரவணன் இயக்கத்தில் வரும் 20ம் தேதி திரைக்கு வரயிருக்கும் ‘நந்தன்’ படத்தை பார்த்த நடிகர் சூரி, ‘இந்த படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது. நந்தன் தந்த பிரமிப்பு இன்னமும் அகலவில்லை’ என்று சசிக்குமாருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

இதை வழக்கமான பாராட்டு மட்டுமல்ல, அவரது ஆதங்கம். ஏனென்றால், இது சூரி நடிப்பதற்காக பிரத்யேகமாக இரா.சரவணன் எழுதிய கதை. சினிமாவுக்கே உரித்தான சில நடைமுறைச் சிக்கல்களால் சூரியால் நடிக்க முடியவில்லை.

சூரிக்குப் பதிலாக சசிகுமார் நடிக்கப்போகிறார் என்று சரவணன் கூறியபோது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏனென்றால், இரா.சரவணன் கதையைப் படித்து அத்தனை தூரம் நெகிழ்ந்து போயிருந்தேன். நடுத்தர வர்க்கத்து சராசரி நண்பராக நடிப்பதற்கு சசிகுமாரை விட நல்ல சாய்ஸ் யாரும் இல்லை என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக அவரால் மாற முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், சசிகுமார் அந்த கேரக்டராகவே மாறி நின்றதைப் பார்த்ததும், சூரியை விட பொருத்தமான சாய்ஸ் என்று சொல்ல வேண்டியதாயிற்று. இன்னொரு நல்ல விஷயமாக, ‘தங்கலான்’ போன்று இதுவும் ஸ்டார் வேல்யூ படமாக மாறிப் போனது.

சமீபத்தில் வாழை படத்தின் வெற்றியைப் பார்க்கும் போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. மக்கள் அழுத்தமான கதைக்கும் உண்மையான வாழ்வுக்கும் சிறப்பாகவே வரவேற்பு கொடுக்கிறார்கள். இது, தமிழ் சினிமாவுக்கு நல்ல செய்தி. இந்த நேரத்தில் மாரி செல்வராஜின் வாழை படத்தை விட அழுத்தமான கதையுடனும், ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலாகவும் நந்தன் வருவது ரொம்பவே பொருத்தம்.

எளிய மக்களின் வலியைச் சொல்லவரும் நந்தன் படத்தில் இரா.சரவணனின் வழக்கமான அரசியல் நையாண்டி, யூகிக்க முடியாத ட்விஸ்ட்களும் நிறைந்த கலகலப்பு அனுபவத்தை மிஸ் பண்ணிட்டீங்களே சூரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *